திருச்சி, திருவானைக்காவலை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ஆட்டுத்தலை மணி என்கிற மணிகண்டன் நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 3 பேர் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை மணிகண்டன் வீட்டில் வீசிய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி திருவானைக்காவல் பாரதி தெருவை சேர்ந்த குணசேகரன் என்பவரது மகன் ஆட்டுத்தலை மணி என்கிற மணிகண்டன். இவர் ஆட்டு இறைச்சி விற்பனை கடை வைத்திருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு களஞ்சியம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற ஆட்டோ டிரைவரை இவர் கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மணிகண்டன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், இரண்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்த வெடிகுண்டு வீச்சில் மணிகண்டன் குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், வீட்டின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தது. இந்த வெடிகுண்டு வைத்த சம்பவம் குறித்து மணிகண்டனின் தாயார் பரமேஸ்வரி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஆட்டோ முருகனின் ஆதரவாளர்கள் இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதே போன்று பாட்டில் வெடிகுண்டு வீச்சு சம்பவம் திருச்சி கோட்டை காவல் சரகத்திற்குட்பட்ட சின்ன மார்க்கெட் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
யார் பெரியவர்? என்ற போட்டியில் இந்த வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றதாக போலீஸ் சார்பில் கூறப்படுகிறது. அடுத்தடுத்து வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் இரும்புக்கரம் கொண்டு ரவுடிகளை அடக்கினால் மட்டுமே, இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.