Skip to main content

செயலற்று போன காவல்துறை: ஸ்டாலின் கண்டனம்

Published on 15/02/2018 | Edited on 15/02/2018

அதிமுகவின் அதிகாரக் குழப்பத்தில் சிக்கி காவல்துறை செயலற்று போனதால் பெண்கள் மீதான பாலியல் வன்முறை – வழிப்பறி – கொலை - கொள்ளைகள் அதிகரித்து உள்நாட்டு பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

சென்னை, நாவலூர் பகுதியில் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியரை கொடூரமாகத் தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ள கயவர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஏறக்குறைய ஒருமணி நேரத்திற்கும் மேலாக ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ள அவரிடமிருந்து நகைகள், ஸ்கூட்டி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு, உயிருக்கு போராடிய நிலையில் இரக்கமே இல்லாமல் அவரை முட்புதருக்குள் வீசிச்சென்றுள்ள அந்தக் காட்டுமிராண்டிகள் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது, சென்னை மாநகர காவல்துறையின் திறமைக்கு விடப்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகும். 
 

கடந்த 2014 ஆம் ஆண்டு, சிறுசேரி ஐ.டி பார்க்கில் பணியாற்றிய உமாமகேஸ்வரி என்ற மென்பொறியாளர், நள்ளிரவுப்பணி முடிந்து திரும்பும் போது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். தற்போது, மீண்டும் ஒரு இளம்பெண்ணுக்கு நேர்ந்துள்ள படுபயங்கர சம்பவம், பாதுகாப்பற்ற மாநகரமாக சென்னை மாறி வருகிறதோ என்ற அச்சத்தை ஐ.டி. நிறுவங்களில் பணியாற்றும் பெண்கள் மற்றும் அவர்களது பெற்றோரிடையே ஏற்படுத்தியுள்ளது. 

இதுபோன்ற, ஐ.டி. நிறுவங்கள் அதிகமுள்ள சென்னையின் புறநகர்ப் பகுதிகளில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது இல்லை. மேலும், ஐ.டி. நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்க முன் வருவதில்லை. இதுபற்றி, மாநகர காவல்துறை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் காவல்துறை அதிகாரிகளும் கவலைப்படுவதில்லை. காவல்துறையில் இரவு ரோந்து உள்ளிட்ட “குற்றத்தடுப்பு”பணிகள் இப்போது முறையாக நடக்கின்றதா? அப்படி நடக்கிறது என்றால் மீண்டும் ஒரு இளம் பெண்ணுக்கு இப்படியொரு அதிபயங்கரம் அரங்கேறியது எப்படி என்ற கேள்வி எழுகிறது. 
 

பெண்கள் பாதுகாப்பிற்காக “ஹெல்ப் லைன்”தொடங்கியது பற்றியெல்லாம் ஏட்டளவில் பல்வேறு பிரச்சாரங்கள் நடக்கிறதே தவிர, முதலமைச்சருக்கு பந்தா காட்டுவதற்காக, சாலையில் வரிசையாக பாதுகாப்பிற்கு நிறுத்துவதற்கும், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் விழாக் கொண்டாட்டங்களுக்கு அளவுகடந்த எண்ணிக்கையில் காவலர்களை அனுப்புவதற்கும்தான் உயரதிகாரிகளுக்கு விருப்பம் இருக்கிறதே தவிர, இதுபோன்ற ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. 
 

Chain robbers


சட்டம் - ஒழுங்கு பணியில் கவனம் செலுத்த வேண்டிய இன்ஸ்பெக்டர்கள் காவல் நிலையங்களில் இருப்பதும், தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரவுண்ட்ஸ் போவதும் பழங்கதைகளாகி, இன்றைக்கு அவர்கள் எல்லாம் ஏதாவது ஒருவகையில், பந்தோபஸ்து என்ற பெயரில், ஓரிடத்தில் குவிக்கப்பட்டு விடுகிறார்கள். முழுக்க முழுக்க அதிமுக அமைச்சர்களின் அரசியல் தலையீட்டில் டிரான்ஸ்பர்கள் நடைபெறுவதால் காவல்துறை நிர்வாகம் முழுமையாக சீரழிந்து விட்டது .அதிமுக அமைச்சர்கள், துணை முதல்வர், முதல்வர் ஆகியோரில் யாருடைய உத்தரவை ஏற்று, செயல்படுவது என்று தெரியாமல் காவல்துறை திணறி நிற்கிறது. 
 

இப்படி, ஒட்டுமொத்தமாக காவல்துறை ஸ்தம்பித்து நிற்பதால், பெண்களுக்கு எதிரான வழிப்பறி, கொள்ளை, கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றச்சம்பங்கள் அதிகரித்து, உள்நாட்டு பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஏராளமான ரவுடிகள் ஒன்றுகூடி பிறந்தநாள் விழா கொண்டாடும் நிலை உருவாகி இருக்கிறது. அதேபோல, குன்றத்தூரில் பட்டப்பகலில் கணவருடன் நடந்துசென்ற மனைவியின் செயின் அறுக்கப்பட்டதும், அந்தப்பெண் நிலை குலைந்து சரிந்துவிழுந்த காட்சியும் பொதுமக்களிடையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 

எனவே, அதிமுக ஆட்சியில் காவல்துறைக்கு ஏற்பட்டுள்ள நிர்வாக சீர்கேடுகள்தான் ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும், பெண்களுக்கு எதிரான செயின் பறிப்பு சம்பவங்களுக்கும் காரணமாக  மாறியிருக்கிறது. ஆகவே, ஐ.டி. நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் காவல் நிலையங்கள் மற்றும் காவலர்களின் எண்ணிக்கையை போதிய அளவில் அதிகரிக்க வேண்டும். மேலும், ஐ.டி. நிறுவன ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, 24 மணி நேர ரோந்துப்பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இன்று அந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்துள்ள கொடூரம், வேறு எந்தவொரு பெண்ணுக்கும் நடந்துவிடாத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிப்பதோடு, ஐ.டி. நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் பணியாற்றும் உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள், உதவி போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை, வேறு பகுதிகளுக்கு பந்தோபஸ்து பணியின் நிமித்தம் அழைக்கக்கூடாது என்றும், மனிதநேயமற்ற, மிருகத்தனமான தாக்குதலுக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்து, அந்த வழக்கை விரைவு நீதிமன்றம் மூலம் நடத்தி, உரிய தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

துப்பாக்கியை காட்டி வங்கியில் 1.5 லட்சம் கொள்ளை..!

Published on 09/09/2019 | Edited on 09/09/2019

ராஜஸ்தானில் உள்ள சிகர் மாவட்டத்திற்குட்பட்ட கிராமப் புறத்தில்தான் இந்த கொள்ளை நடந்துள்ளது. அங்கிருக்கும் ஊரக வங்கி ஒன்றில் திடீரென புகுந்த 6 கொள்ளையர்கள் அந்த வங்கியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு, 1.3 லட்சத்தை திருடிக்கொண்டு தப்பியுள்ளனர். இந்த பகல் கொள்ளையில், வங்கிக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணத்தைப் பறித்துச் சென்றுள்ள சம்பவமும் சிசிடிவி கேமராவில் பதிவானதோடு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

cvnn



இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதோடு, அவர்கள் அனைவரும் ஹரியானாவுக்கு தப்பி ஓடியிருக்க வாய்ப்புள்ளதாக போலீஸார் கருதுகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, இத்தனை பாதுகாப்புக் காவலர்களை மீறி கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந்துள்ள சம்பவம் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் மாநிலத்தில் காவல்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது.

 

Next Story

சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் சிக்கினார்!

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறையினர் கண்டுபிடித்து விசாரித்து வருகின்றனர்.

 

s


சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாகவும், அது சற்று நேரத்தில் வெடித்து விடும் என்றும் சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மார்ச் 7ம் தேதி மர்ம நபர் ஒருவர் தகவல் அளித்தார். 


இதையடுத்து சென்னை காவல்துறையினர் சேலம் மாநகர காவல்துறையை உஷார்படுத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை, மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை நடத்தியதில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. மோப்ப நாய் கொண்டும் சோதனை நடத்தப்பட்டது. தொலைபேசியில் வந்த தகவல் வதந்தி என்பது தெரிய வந்தது.


காவல்துறையையும், பொதுமக்களையும் அலைக்கழித்த மர்ம நபர் யார் என்பதை கண்டறியும் பணியில் காவல்துறையினர் இறங்கினர். தொலைபேசியில் பேசிய மர்ம நபர் ஒரு செல்போன் எண்ணில் இருந்து பேசியிருந்தார். அந்த நபர் ரஹ்மான் என்பவரும் அவருடைய கூட்டாளிகளும் குண்டு வைத்ததாக பேசியதைக் கேட்டேன் என்றும் தொலைபேசி உரையாடலின்போதும் கூறியிருந்தார். அதை வைத்தும், எந்த டவர் சிக்னலில் இருந்து பேசப்பட்டது என்பது குறித்தும் சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் மர்ம நபரைக் கண்டுபிடித்தனர்.


வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டியைச் சேர்ந்த மணிவண்ணன் (30) என்பது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.


சேலம் எழில் நகரைச் சேர்ந்த ரஹ்மான் என்பவர் மணிவண்ணனிடம் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக, 3 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


அதனால் ஏற்பட்ட விரக்தியில் ரஹ்மானையும் அவருடைய நண்பர்களையும் சிக்க வைப்பதற்காக, அவர் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக ரஹ்மான் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலரிடமும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.