Skip to main content

“ஒருவர் தவறு செய்தால் ஒட்டுமொத்த துறையையும் குறை கூறுவதா” - ஆளுநர்  தமிழிசை

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

“If one person makes a mistake, blame the whole department” - Governor Tamil Nadu
கோப்புப் படம் 

 

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் நேற்று திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் 15 மணி நேர விசாரணையும், அவர் பணிபுரிந்து வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேர சோதனையும் நிறைவடைந்து இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இன்று புதுச்சேரியில் அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஆளுநர்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள், அமலாக்கத்துறை பா.ஜ.க., லஞ்ச ஒழிப்புத்துறை பா.ஜ.க. என திமுகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அப்படியெனில் தமிழக காவல்துறையை திமுக எனக் குறிப்பிடலாமா? தமிழ்நாட்டில் சமீபத்தில் ஒரு அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டது. உடனே எல்லா அமைச்சர்கள் வீட்டிற்கும், முதலைமைச்சர் வீட்டிற்கும் சென்று ரெய்டு நடத்துவேன் என்று அதிகாரிகள் கூறினார்களா?

 

அதுபோல்தான் இதுவும், அமலாக்கத்துறையில் ஒரு அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்காக அந்தத் துறையில் இருப்பவர்கள் அனைவருமே லஞ்சம் வாங்குவார்கள். அந்தத் துறையே கறை பிடித்திருக்கிறது என்று எப்படி கூறமுடியும்? அமலாக்கத்துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறை. இப்படி இருக்கையில், இந்தத் துறையின் அலுவலகத்தில் நாங்கள் ரெய்டு நடத்துவோம் என மாநில லஞ்ச ஒழிப்புத்துறை கூறுகிறது எனில், இது தவறான முன்னுதாரணம்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்