Skip to main content

“சனாதனம் குறித்து தனிப்பட்ட முறையில் பேசினேன்” - அமைச்சர் உதயநிதி தரப்பு வாதம்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

nn

 

அண்மையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது தான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். சினிமாவில் சமஸ்கிருதம் கலந்த தமிழ் வசனங்கள் பேசப்பட்டுக் கொண்டிருந்த பொழுது கலைஞர் தான் 'எந்த காலத்திலடா பேசினால் பராசக்தி' என வசனம் வைத்தார். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.

 

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்திருக்கின்ற நரேந்திர மோடி. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும். அடைவார்” என்றார்.

 

nn

 

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து சனாதனம் தொடர்பாக விமர்சித்துப் பேசியதாகவும் அமைச்சர் உதயநிதி, சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்து முன்னணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், 'சனாதனம் தொடர்பாக தனிப்பட்ட முறையில் பேசினேன்; அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை’ என உதயநிதி தரப்பு வாதிட்டது. ‘இறையாண்மைக்கு விரோதமாகப் பேசியதாகக் குற்றம்சாட்டும் மனுதாரர்கள் அதற்கான ஆதாரங்களைத் தெரிவிக்கவில்லை’ எனவும் வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, ஆ. ராசா மீதான வழக்குகளை அக்.31 ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

 

சார்ந்த செய்திகள்