Skip to main content

கானா மூலம் வன்முறை... இளைஞருக்கு போலீஸ் கொடுத்த புதுவித ட்ரீட்மெண்ட்..!

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

'' I made a mistake, I made a mistake ... ''  rowdy apologize

 

கோவையில் கானா பாட்டு என்ற பெயரில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பாடல் பாடி சண்டையில் ஈடுபட்ட இளைஞரைக் கைது செய்த போலீசார் மன்னிப்பு பாடல் ஒன்றைப் பாட வைத்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

 

கோவை சூலூர் பகுதியில் கானா பாடல் பாடும் ஒரு இளைஞர்கள் குழு வன்முறையைத் தூண்டும் விதத்தில் பாடல்களை பாடி சமூகவலைதளத்தில் வெளியிட்டு வந்தது. 'ஸ்வீட் ராஸ்கல்' என்று இருந்த அந்த குழு காலப்போக்கில் ஏற்பட்ட மோதலில் 'எவரெஸ்ட் பாய்ஸ்' என இரண்டாக பிரிந்தது. பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை தினங்களில் இந்த குழுவினருக்கு இடையே மோதல்போக்கு ஏற்படுவது வழக்கமானது. இவர்களது தொல்லை தாங்க முடியாமல் சூலூர் காவல்நிலையத்திற்கு அதிக புகார்கள் வந்த நிலையில், சூலூர் போலீசார் இந்த குழுக்களில் உள்ள 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

 

'' I made a mistake, I made a mistake ... ''  rowdy apologize

 

இந்த எட்டு பேரில் ஒருவர் அண்மையில் ஜாமீனில் வெளிவர, எதிர் குழுவினர் அவரை ஆயுதங்களைக்கொண்டு தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் 6 பேர் மீது மீண்டும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் சூலூர் ராம்ராஜ் நகரை சேர்ந்த மதியழகன் என்பவர் மகன் அபீஸ் என்ற இளைஞனை போலீசார் தேடிவந்தனர். 12 ஆம்  வகுப்பைப் பாதியில் விட்டுவிட்டு கானா பாடல் பாடும் அபீஸ் கானா பாடல் என்ற பெயரில் வன்முறையைத் தூண்டிவந்துள்ளான். அண்மையில் ''திட்டமிட்டு பண்ணிடுவேன் பெரிய மர்டர... கைவெச்சு நீ தாண்ட மாட்ட ஏரியா பார்டர...'' என்ற வன்முறை பாடலை பாடி சமூகவலைதளத்தில் தட்டிவிட்டுள்ளான். இதற்கு மேலும் பொறுக்க முடியாத போலீசார் அவனைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

 

இதனையடுத்து சூலூர் காவல்நிலைய ஆய்வாளர் மாதையன், உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலை டீ கடை ஒன்றில் இருந்து அபீஸை  கைது செய்தனர். உடனடியாக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட அபீஸை  மன்னிப்பு கேட்கும் வகையில் கானா பாடல் பாட வைத்து வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர். ''தப்புமேல தப்பு... பண்ணிட்டேன் தப்பு மேல தப்பு... கானா பாடலை தவறா பாடுனதுனால இப்போ நிக்கிறேன் இந்த நிலைமையில'' என பாடவைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்