Skip to main content

“எனக்கு அவர்களைவிட கூடுதல் திமிரு இருக்கிறது..” - சீமான் 

Published on 27/12/2021 | Edited on 27/12/2021

 

"I have more arrogance than them." - Seaman

 

நாகை அவுரித்திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை ஏற்றார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி முழக்கமிட்டனர்.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான். "20 ஆண்டுகளாக சிறையில் வாடும் இஸ்லாமியர்களையும், 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகிறோம். இது அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. என் மக்களுக்கு ஆதரவான போராட்டம். ஆர்ப்பாட்ட அளவில் எங்கள் கோரிக்கையை ஏற்று விடுதலை செய்யாவிட்டால், தொடர் போராட்டங்களை நடத்துவோம். திமுகவினர் எங்களை  எதிர்ப்பதை வரவேற்கிறோம். வடசென்னை படத்தில் வருவதுபோல, இது என் நாடு, என் நிலம் என்று அதைப் பாதுகாப்பதற்காக நாங்கள் சண்டை செய்யணும் இல்லையா. 

 

பிரபாகரனின் பிள்ளைகளான நாங்கள் கொடி பிடிப்பதற்கும், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் பயந்தால் என்ன ஆவது? அவர்கள், எம்,ஜி,ஆர், கலைஞரை பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள். நாங்கள் பிரபாகரனைப் பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள். எனவே எனக்கு அவர்களைவிட கூடுதல் திமிரு இருக்கிறது. 

 

நான் செருப்பு காட்டியதை, சாதாரணமாக விட்டுவிடக்கூடாது என்று எங்க அண்ணன் (திருமாவளவன்) பேசியிருக்கிறார். நான் அவருக்கு எதிராகக் காட்டவில்லையே. அவர் எனக்கு எதிராகப் பேசலாம். நான் அவருக்கு எதிராகப் பேசுவதில்லை. இனியும் பேசப் போவதில்லை. குஜராத்தில் மீனவர்கள் மீது காட்டும் அக்கறையை தமிழக மீனவர்கள் மீதும் காட்ட வேண்டும். மீனவர்கள் வாக்கு, வளம் ஆகியவற்றை எடுத்து கொண்ட மத்திய அரசு மீனவர்கள் உயிருக்கு மதிப்பளிக்காமல், உணர்வைப் பற்றி கவலைப்படாமல் இருந்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். தமிழக அரசு உரிய அழுத்தம் தந்தால்தான் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்" என்று பேசினார்.  

 

 

சார்ந்த செய்திகள்