Skip to main content

“என் கம்பெனில நான் வேலை கொடுக்கிறேன்...”-எச்.ராஜாவை டிவி வேலைக்கு அழைத்த ஊடகவியலாளர்!

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

nn

 

பா.ஜ.க. முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்திக்கும்போதெல்லாம் டென்ஷனாகி வரம்பு மீறிப் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.  

 

அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்கள் வீட்டுப் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த எச்.ராஜாவை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

 

அப்போது,  அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தை தொடர்புப்படுத்தும் விதத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாக லீக்கான ஆடியோ குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு எச்.ராஜா “இந்தக் கேள்வியே தப்பு. நேற்று எங்கள் மதுரை மாவட்டத் தலைவர் இது ஃபேக் ஆடியோ என்று சொன்னது எல்லா சோஷியல் மீடியாவுலயும் வந்திருக்கு. அவர் சரவணன் மிமிக்ரி பண்ணி வெளியிட்டிருக்காருன்னு  கம்ப்ளைண்ட் கொடுத்திருக்காரு அப்புறம் என்கிட்ட என்ன?” என்று கோபமாக, நிருபர் ஒருவர்  “நாங்க கேள்வி கேட்கிறோம். அதற்கு பதில் இல்லையென்றால் முடிஞ்சு போச்சு..” என்று கூற, எச்.ராஜாவோ “நீங்க ஒவ்வொண்ணும் கேட்பீங்க.. அப்புறம் நான் கேட்டா தப்பா போயிரும்.  உங்க வீட்ல யாரையாவது பத்தி நான் சும்மா கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லுங்கன்னு..” என்று பேச்சை உஷ்ணமாக்க.. அந்த நிருபரும் விடாமல் “நான் உங்க வீட்ல உள்ள ஆள கேள்வி கேட்டா தப்பாயிரும்ல. அதேதான்..” என்று மடக்க, ஆத்திரமான எச்.ராஜா “என் கட்சி  என் வீடு. நீங்க பேசக்கூடாது. இந்த கேள்வியை அங்கே கேட்பீங்களா? முதுகெலும்பு இருக்கா? தைரியம் இருக்கா? ராஜாகிட்ட வந்து என்னமோ தைரியமா கேள்வி கேட்டுட்டோம்னு நினைச்சிக்கிறதா? இனிமே பொய்யா யாருகிட்டயும் கேட்காதீங்க. வேலையே இல்லைன்னா பரவாயில்ல. வாங்க என் வீட்ல நான்  வேலை தர்றேன்.” என்று தெனாவெட்டாகப் பேச, அந்த நிருபர் “நீங்க வாங்க சார்.. என் கம்பெனில நான் வேலை கொடுக்கிறேன்.”என்று பதிலடி கொடுக்க, எச்.ராஜா விருட்டென்று கிளம்பினார். அவருடன் வந்த பா.ஜ.க.வினர் அந்த நிருபரைத் திட்டியபடியே சென்றனர்.

 

எச்.ராஜா போன்ற பா.ஜ.க. தலைவர்கள்,  செய்தியாளர்களின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல், அனைத்துச் செய்தியாளர்களையும் அவ்வப்போது விமர்சித்து வருகின்றனர்.  ‘நீங்க எந்த டிவி? நீங்க எந்தப் பத்திரிகை?’ என்றும் கேட்கின்றனர்.  ஒருபடி மேலே போய், செய்தியாளர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களையும், அதனை நிர்வகிப்பவர்களையும் திட்டுகின்றனர்.

 

பா.ஜ.க. தலைவர்களின் கோபத்துக்கான  காரணத்தைச் சொன்னார் ஒரு மூத்த செய்தியாளர். “பா.ஜ.க.வினருக்கு தெரிந்ததெல்லாம் மத அரசியல்.. சாதி அரசியல்தான். தமிழ்நாட்டில் சாதி, மதம் பார்க்காமல் செயல்படுவது ஊடகங்கள் மட்டும்தான். அதனாலேயே, சமூக நீதி பக்கம் ஊடகங்கள் நிற்கின்றன. சனாதனத்தை தூக்கிப்பிடிக்கும் பா.ஜ.க. தலைவர்களுக்கு சமூக நீதி என்றால் வேப்பங்காயாகக் கசக்கும்.  அந்த வெறுப்பை ஊடக நிறுவனங்கள் மீதும், செய்தியாளர்கள் மீதும் காட்டுகின்றனர். இதிலேயே, அவர்களது போலி சனாதனதர்மம் வெளிப்பட்டுவிடுகிறது.” என்றார்.

 

செய்தியாளருக்கு வீட்டு வேலை தருவதாக எச்.ராஜா சொன்னது எத்தனை ஆணவமான பேச்சு! 

சார்ந்த செய்திகள்