ஓசூர் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு, போடூர், பேரண்டபள்ளி வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள், அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது தொடர்கின்றது. இரவு நேரங்களில் திடீர் திடீரென்று வரும் யானைகளால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும் யானைகள் விளைநிலங்களில் இறங்கி பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைக்கூட்டத்தில் இருந்து ஒரே ஒரு யானை மட்டும் வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்து நெல், கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு இரண்டு காட்டுயானைகள் பென்னிக்கல் மற்றும் டி.கொத்தப்பள்ளி ஆகிய கிராமங்களுக்குள் புகுந்து பீன்ஸ், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை துவம்சம் செய்துவிட்டு வனப்பகுதிக்கு திரும்பின. பயிர்களை நாசப்படுத்தும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் மீண்டும் விரட்ட வேண்டும் என்றும், யானையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.