Skip to main content

34 மாதங்களுக்குப் பிறகு ஹரி நாடாருக்கு ஜாமீன்!

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Hari Nadar gets bail after 34 months

திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தைக்குளம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஹரி நாடார். இவர் மீது பைனான்ஸ் தொழில் செய்து வந்ததுடன் ராக்கெட் ராஜாவின் பனங்காட்டுப்படை என்ற  கட்சியில் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். அதே சமயம் இவர் மீதான சுமார் 16 கோடி பண மோசடி வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளம் கடற்கரையை ஒட்டியுள்ள நட்சத்திர விடுதியில் வைத்து பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.

அதன் பின்னர் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் நடிகை விஜயலட்சுமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கிலும், மற்றொரு பண மோசடி வழக்கிலும், ராக்கெட் ராஜாவுக்கு ஆதரவாக அரசு பேருந்தை எரித்த வழக்கிலும் ஹரி நாடாருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து மற்ற வழக்குகளில் ஜாமீன் கிடைத்த நிலையில் பண மோசடி வழக்கில் மட்டும் ஜாமீன் கிடைக்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில் பணமோசடி வழக்கில் ஜாமீன் கோரி ஹரி நாடார் மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று (22.02.2024) விசாரித்த பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றம் 34 மாதங்களாக சிறையில் உள்ள ஹரி நாடாருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஓரிரு நாளில் ஹரி நாடார் விடுதலை செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு தமிழகத்திலேயே சுயேட்சை வேட்பாளர்களில் அதிக வாக்குகள் அதாவது 37 ஆயிரத்து 726 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்