உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர்கள் என அனைவருக்கும் கரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உதவியாளருக்கு கரோனா உறுதியானதால், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனை கடந்த வாரம் அறிக்கை வாயிலாக ஆளுநர் மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது உடல் நலப்பரிசோதனைக்காக அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.