Skip to main content

“இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது” - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

The Government of Tamil Nadu is determined to uphold the rights of Sri Lankan Tamils CM Stalin

 

இலங்கை அதிபர், இந்தியாவிற்கு விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும்,  இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும்,, அவர்களது உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்திடவும் இலங்கை அதிபரை வலியுறுத்திட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கை அதிபர், 2022-ம் ஆண்டு பதவியேற்றதற்குப் பிறகு முதன்முறையாக 2 நாள் பயணமாக புதுதில்லி வரவுள்ளார். தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் பூகோள ரீதியான நெருக்கம் மற்றும் வரலாற்று, பொருளாதார மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் காரணமாக நீண்டகாலமாக பல பிரச்சினைகள் நிலுவையில் உள்ளது.  

 

இலங்கை அதிபருடனான பேச்சுவார்த்தையின் போது  தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் கவலையளிக்கும் இரண்டு முக்கிய பிரச்சினைகளான கச்சத்தீவை மீட்பது மற்றும் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பது குறித்தும், இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி. அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்தல் வேண்டும். கச்சத்தீவை மீட்பது மற்றும் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் முற்றிலும் தடுக்க வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க வேண்டும்.

 

மீனவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், இரு நாட்டு அதிகாரிகளையும் உள்ளடக்கிய மறுசீரமைக்கப்பட்ட கூட்டுப் பணிக்குழு (Joint Working Group) 2016 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதுவரை, ஐந்து சுற்று கூட்டுச் செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.  கடைசியாக மார்ச் 2022 இல் இதுதொடர்பான கூட்டம் நடைபெற்றது. இருப்பினும், இந்தப் பிரச்சினைக்கு இதுநாள்வரை ஒரு சுமூகமான தீர்வு ஏற்படவில்லை. எனவே உரிய காலத்தில் கூட்டங்கள் நடத்தி ஆலோசனைகள் மேற்கொள்வதன் மூலம், மீனவர்களிடையே நம்பிக்கையை உருவாக்கவும், பயனுள்ள தகவல் தொடர்புகளை எளிதாக்கவும். சுமூகமான மீன்பிடி நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும் இயலும். 

 

1956 ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதிலும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும் தமிழ்நாடு அரசும், திமுகவும் உறுதியாக உள்ளது. மேலும் இலங்கையில் உள்ள தமிழர்களின் சமூக, அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாத்து, அவர்கள் இலங்கையின் சமமான குடிமக்களாக, கண்ணியமான வாழ்க்கையை வாழ் வேண்டியது அவசியமாகும். இந்த நோக்கத்திற்காக, இலங்கையில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஆக்கபூர்வமான உறுதியான தீர்வை எட்டுவதற்கு இலங்கை அதிபரை பிரதமர் வலியுறுத்திட வேண்டும்  என முதல்வர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்