Skip to main content

"விவசாயிகளை வஞ்சிக்கும் சர்க்கரை ஆலைகளைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்! " - கே.பாலகிருஷ்ணன் பேட்டி!

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

l;'

 

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திலுள்ள ஸ்ரீஅம்பிகா சர்க்கரை ஆலை மற்றும் எ.சித்தூரிலுள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை ஆகிய 2 சர்க்கரை ஆலைகளுக்கும் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு அனுப்பிய வகையில் சுமார் 200 கோடி நிலுவைத் தொகை பாக்கி வைத்துள்ளது. மேலும் விவசாயிகள் பெயரில் சுமார் 250 கோடி வங்கிகளில் கடன் பெற்றுள்ளது. இதனால் நிலுவைத் தொகை கிடைக்காமலும், கடன் தொகை கட்ட முடியாமலும் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.  இதனால் நிலுவைத் தொகை வழங்கக் கோரியும், கடன் தொகையைத் தள்ளுபடி செய்யக் கோரியும் இப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இந்த நிலையில் 2 சர்க்கரை ஆலைகளையும் தனியாருக்கு விற்று விட்டதாகவும், அவர்கள் சாராய தொழிற்சாலையாக மாற்றுவதற்கு முயல்வதாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து இந்த ஆலைகளைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும், விவசாயிகளுக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், விவசாயிகள் பெயரில் ஆலை நிர்வாகம் வங்கிகளில் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், தொழிலாளிகளுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்பு பயிர்களுடன் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, " தமிழகத்தில் உள்ள விவசாயிகள் நெருக்கடியில், உள்ளனர். விவசாயிகள் உற்பத்தி செய்த கரும்பு, நெல்லிற்காக மத்திய அரசு பல்வேறு நிபந்தனைகளை வகுத்துள்ளதால், விவசாயிகள் முழுமையாக உற்பத்தி செய்ய முடியவில்லை. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அம்பிகா மற்றும் ஆரூரான் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளை மொட்டை அடித்து விட்டு, திவால் என அறிவித்துவிட்டன. கரும்பு விவசாயிகளுக்கு,  தரவேண்டிய 200 கோடியை ஏமாற்றி விட்டன.  விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் 300 கோடி ரூபாய் கடன் வாங்கியது விசித்திரமாக உள்ளது. 300 கோடி பெற்றுக்கொண்ட ஆலை நிர்வாகத்தின் செயலினால் விவசாயிகளுக்கு நோட்டீஸ் வருகிறது. ஏற்கனவே விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை 200 கோடி உள்ள நிலையில் கூடுதலாக, ஆலை நிர்வாகம் பெற்ற தொகைக்கு நோட்டீஸ் வருவதால் கடலூர் மாவட்ட விவசாயிகளின் நிலைமை,  நிலத்தை விற்றுவிட்டு தலையில் துண்டு போட்டுவிட்டுப் போக வேண்டிய நிலைக்குத் தான் தள்ளப்பட்டுள்ளனர். 

 

மோசடி செய்த ஆலை நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிந்தும், ஆலை நிர்வாகத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யாமல், கைது செய்யப்படாமலும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆலை நிர்வாகம் மீது வழக்குப் போடப்பட்டும், அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு அரசுகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது விவசாயிகளை மோசடி செய்த இரண்டு ஆலைகளையும் தனியார் நிறுவனத்திற்கு விற்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எனவே தமிழக முதல்வர் இதில் அக்கறை செலுத்த வேண்டும். தமிழக முதல்வரும், கடலூர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர்களும் துரிதமாக நடவடிக்கை எடுத்து, இரண்டு ஆலைகளையும் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்" என்று கூறினார். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் விவசாயிகள் சார்பில்  கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்