Skip to main content

திடீரென மயங்கி விழுந்த அரசு பேருந்து நடத்துநர்!

Published on 08/02/2021 | Edited on 09/02/2021

 

government bust conductor pudukkottai district transport


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் புதுக்கோட்டை- கொத்தமங்கலம் செல்லும் அரசு டவுன் பேருந்தில், பழனியப்பன் (வயது 35) என்பவர் நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். இவர் மணப்பாறையைச் சேர்ந்தவர். கடந்த திங்கள்கிழமை மாலை, புதுக்கோட்டையில் இருந்து கொத்தமங்கலம் வாடி மாநகர் கடைவீதிக்கு, பேருந்தில் நடத்துநராக வந்துள்ளார். 

 

பேருந்து மீண்டும் புதுக்கோட்டைக்குச் செல்வதற்காக, பேருந்தை ஓட்டுநர் திருப்பும் போது, பழனியப்பன் பின்பக்கம் பார்த்துக் கொண்டு விசில் ஊதிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சத்தம் போட்டு பேருந்தை நிறுத்தச் சொல்லி மயங்கிக் கிடந்த நடத்துநரை மீட்டு, தண்ணீர் தெளித்து முதலுதவி செய்துள்ளனர்.

 

அதைத் தொடர்ந்து இறங்கிவந்த பேருந்து ஓட்டுநர் மயங்கிக் கிடந்த நடத்துநரை, அதே பேருந்தில் ஏற்றி கொத்தமங்கலம் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, குளுக்கோஸ் ஏற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.  

 

முன்னதாக, சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி பணிமனை அதிகாரிகள், சிகிச்சை பெற்று வந்த நடத்துநர் பழனியப்பனை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். தொடர்ந்து இரண்டு நாட்களாக வேலை செய்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக சக ஊழியர்கள் கூறினாலும், கடந்த ஒரு வாரமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக நடத்துநர் பழனியப்பன் கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்பதாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

பேருந்துகள் சேதம் குறித்து தொடர் புகார்கள்; போக்குவரத்துத் துறை கெடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
transport department action on Frequent complaints about damage to buses

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து புதிய பேருந்துகளை தமிழ்நாடு அரசு வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

அதுமட்டுமல்லாமல், பேருந்துகள் சேதம் குறித்து தொடர்ச்சியாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடர் புகார்களை அடுத்து, போக்குவரத்துத் துறை அனைத்து பேருந்துகளுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், ‘48 மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். அதன் ஆய்வு தொடர்பான அறிக்கையை போக்குவரத்து செயலாளரிடம் சமர்ப்பிக்க மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளது.