Skip to main content

சிறுமியின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்... சிகிச்சை அளிக்க ஏற்பாடு!

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

Government action to treat the girl suffering from facial deformity!

 

முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்டீபன்ராஜ்- சௌந்தர்யா தம்பதியினர். இவர்களது 9 வயது மகள் தானியா. வீராபுரம் அரசு பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மூன்று வயது வரை சராசரி குழந்தையாக இருந்த தானியாவின் கன்னத்தில் கரும்புள்ளி ஒன்று தோன்றியது. இதனை ரத்த கட்டி என பெற்றோர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்ட நிலையில் நாளடைவில் அந்த புள்ளி பாதி முகத்தை சிதைக்கும் அளவிற்கு உருவானது. உடனே பெற்றோர் எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் நாளுக்குநாள் அதிகரித்த பாதிப்பு அவரது கண், கன்னம், வாய் என முகத்தின் பாதியை சிதைத்துவிட்டது. தங்களது சக்திக்கும் மீறி பல இடங்களில் கடன் வாங்கி தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைகளை தொடங்கிய நிலையில் அதுவும் கைகொடுக்கவில்லை.

 

பள்ளி செல்லுகையிலும், டியூசன் செல்லுகையிலும் சிறுமி தானியாவை சக மாணவர்களே ஒதுக்கி வைப்பது தானியாவிற்கு மனச்சுமையை ஏற்படுத்தியது. இதனால் வீட்டிற்கு வந்தவுடன் அழுவதாக சிறுமியின் தாய் சௌந்தர்யா தெரிவிக்கிறார். எப்படியாவது எங்கள் குழந்தையை அரசு மீட்டுத்தர வேண்டும். மற்ற குழந்தைகளை போல எங்கள் குழந்தையும் இருக்க வேண்டும். அதற்கு முதல்வர் உதவி வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்திருந்தனர் தானியாவின் பெற்றோர்.

 

தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து சிறுமி தானியா தெரிவிக்கையில்,  ''பிரெண்ட்ஸ்ங்க கூட வெறுக்குறாங்க. உனக்கு இந்த மாதிரி கன்னம் இருக்கு நீ இங்க வந்து உட்காரக்கூடாது. நீ லாஸ்ட்ல போய் உட்காரு'னு சொல்வாங்க. கடைசி பெஞ்ச் இருக்கும் அங்கதான் நான் போய் லாஸ்ட்ல உட்காருவேன். புக்கு கூட எடுத்துட்டு வந்து கைல தரமாட்டாங்க டேபிள் மேலதான் வைப்பாங்க. முதலமைச்சர் ஐயா எனக்கு கன்னம் இப்படி இருக்குறதால யாருமே பேசமாட்றாங்க. எனக்கு நீங்க சரிபண்ணி தாங்க. எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு'' என்றார் ஏதுமறியா மழலை குரலில்.

 

இந்நிலையில் தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தானியாவிற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்