முன்னாள் குடியரசு தலைவரான ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ந்தேதியை ஆசிரியர் தினமாக அறிவித்து நல்லாசிரியர் விருது மத்திய, மாநில அரசுகள் வழங்கிவருகிறது.
அந்த வகையில் கடந்த செப்டம்பர் 3ந்தேதி தமிழகரசின் சார்பில் தமிழகத்தில் நல்லாசிரியர் விருது பெறுபவர்கள் பட்டியலை அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்த பட்டியலில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 13 ஆசிரியர்கள் நல்லாசிரியர்களுக்கு விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தான் சாதி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, இந்திய குடியரசு கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் இராசி தலித் குமார் எழுப்பியுள்ள சர்ச்சையில், இவ்வாண்டு வேலூர் மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. குடியாத்தம் தனி தொகுதியில் பணி புரியும் பல நூறு நல்லாசிரியர்களில் ஒருவருக்கும் இவ்வாண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது கிடைக்கவில்லை.
விருது பெற்றவர்களில் ஏழுக்கும் மேற்பட்டோர் ஜோலார்ப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதியைச் சார்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் அரக்கோணம் பகுதியைச் சார்ந்தவர்கள்.
ஆளும்கட்சி அரசியல்வாதிகளின் தலையீட்டால் இந்தநிலை ஏற்பட்டதாக கல்வியாளர்கள் கருதுகிறார்கள். எனவே தான் குடியாத்தம் வட்டம் சார்ந்த பல தகுதியுடைய நல்லாசிரியர்களில் ஒருவருக்கும் தகுதி இருந்தும் விருது கிடைக்கவில்லை.
விருது பெற்றவர்களில் அதிகமானோர் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. ஆட்சியாளர்கள் இனியாவது வட்டாரம் , சாதியை விட்டு தகுதியைப் பார்ப்பார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.