Skip to main content

பூட்டியே கிடக்கும் கேட்டுக்கு பணியாளரை நியமிக்க கோரி கிராம மக்கள் ரயில் மறியல்.

Published on 09/10/2019 | Edited on 09/10/2019

திண்டுக்கல்லில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் 11 வது கிலோ மீட்டரில் அம்பாத்துரை ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு கிழக்கே சாமியார்பட்டி, தொப்பம்பட்டி, அண்ணாநகர், இந்திரா நகர், எர்நாகம்பட்டி ஆகிய கிராமங்களும், சிறுமலை அடிவாரத்தில் தோட்டங்களும் உள்ளது. இந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகளுக்காக அம்பாத்துரை ரெயில் நிலையம் அருகே  ரெயில்வே கேட் உள்ளது. 
 

gate keeperissue



இந்த ரெயில்வே கேட் எப்போதும் பூட்டியே கிடக்கும். பகல் நேரங்களில் மட்டும் ஒரு நாளைக்கு 4 முறை இந்த கேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள பணியாளர் ஒருவர் வந்து சிறிது நேரம் திறந்துவைத்து விட்டு மீண்டும் உடனே அடைத்து விட்டு சென்றுவிடுவதாகவும், மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை எப்போதும் பூட்டியே இருப்பதாகவும், பொது மக்கள் இந்த ரெயில்வே கேட்டை கடந்து செல்ல முடியாமல் கடும் அவதிப்படுவதாக கூறி இந்த ரெயில்வே கேட்டுக்கு நிரந்தரமாக கேட் கீப்பரை நியமிக்க வேண்டும் என 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். 

ஆனால், நிரந்தர கேட் கீப்பரை நியமித்தாலும் சரக்கு ரெயில் இந்த கேட்டை மறித்து பல மணி நேரம் நிற்பதால் இதற்கு நிரந்தர தீர்வு காண ரயில்வே துறை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அரை கிலோ மீட்டர் தள்ளி புதிதாக ஒரு கேட்டை அமைத்து அதற்கு இரண்டு புறமும் சாலையும் போடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த புதிய ரெயில்வே கேட் பயன்பாட்டுக்கு வராமலேயே மீண்டும் கேட்டை எடுத்து சென்றுவிட்டனர்.

இதனால்  தற்போது பயன்பாட்டில் உள்ள ரயில்வே கேட்டும்  பூட்டியே இருப்பதால் இப்பகுதி மக்கள் கேட் அருகே இரண்டு சக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்கு பாதை அமைத்து அந்த பாதையை பொது மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இதனை பார்த்த ரயில்வே அதிகாரிகள் நேற்று பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை ராட்சத குழி தோண்டி பொது மக்கள் பயன்படுத்த முடியாமல் அடைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் சுமார் 400 பேர் நேற்று மதியம் 2.30 மணியளவில் அம்பாத்துரை ரயில் நிலையம் அருகே கூடினர். பின்பு அவர்கள் நிரந்தர ரெயில்வே கேட் கீப்பர் போட வேண்டும், ரயில்கள் வராத நேரத்தில் கேட்டை திறந்து வைக்க வேண்டும் என கூறி தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். 

இதனை தொர்ந்து திண்டுக்கல் ரெயில்வே சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ்,  அம்பாத்துரை ரெயில் நிலைய அதிகாரி, அம்பாத்துரை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாதவராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பொது மக்கள் வாக்குறுதி கொடுத்தால் மட்டுமே மறியலை கைவிடுவதாக தெரிவித்தனர். 

அப்போது மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேஜஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலை மறிக்க பொது மக்கள் முயன்றனர். இதனால் பரப்பரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து தேஜஸ் ரெயில் மெதுவாக அம்பாத்துரையை கடந்து திண்டுக்கல் சென்றது.

இதன் பின்னர் கேட் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொது மக்கள் திறக்கப்பட்ட பின்பு தான் சிக்னல் கிடைத்து தேஜஸ் ரெயில் கடந்து போனது என்று கேட்டை பூட்ட விடாமல் கேட்டுக்கு கீழே இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடத்தினர்.
 

gate keeperissue



இதனால் கேட்டை ஊழியர்களால் பூட்ட முடியவில்லை, அப்போது மதுரையில் இருந்து திண்டுக்கல் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. பொது மக்கள் கேட்டை பூட்ட விடாமல் மறியல் செய்ததால் அந்த ரயில் நடு வழியில் நிறுதப்பட்டது. அதே போல் ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வழியாக நெல்லை பாசஞ்சர் ரெயில் வெள்ளோடு அருகேவும், நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் பாசஞ்சர் ரெயில் கொடைரோடு அருகேயும் ஆங்காங்கே நடு வழியில் நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து அங்கு வந்த திண்டுக்கல் துணை சுப்ரிடென்ட் வினோத், அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் மறியலில் ஈடுப்பட்ட பொது மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் ரயில்வே துறை சார்பில் உடனடியாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கேட் கேப்பர் போடப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து 5.15 மணியளவில் போராட்டத்த பொது மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் பின்னர் கேட் மூடப்பட்டு  ஆங்காங்கே நடு வழியில் நின்ற ரயில்கள் ஒவ்வொன்றாக அம்பாத்துரையை கடந்து சென்றது.

சார்ந்த செய்திகள்