Skip to main content

8 வழிச் சாலை தேவையில்லை என்பதே மார்க்சிஸ்ட் நிலைப்பாடு: ஜி.ரா. பேட்டி

Published on 03/07/2018 | Edited on 03/07/2018
G. Ramakrishnan


சேலம் - சென்னைக்கு ஏற்கனவே 2 நெடுஞ்சாலைகள் உள்ள நிலையில் 3வதாக 8 வழிச் சாலை அமைக்க தேவையில்லை என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அரசியல் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்தித்தார். 
 

அப்போது பேசிய அவர், 
 


மத்திய அரசின் முடிவுகள் சாமானியர்களை பாதிக்கிறது. ஜி.எஸ்.டி வரி திட்டம் அமலான பிறகு சிறு, குறு நிறுவங்கள் மூடப்பட்டுள்ளது. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இது குறித்து பேச பிரதமர் மறுக்கிறார். பல்கலைக்கழக மானியக்குழுவை மூடிவிட்டு அரசின் துறையாக மாற்றும் அரசாணையால் மேலும் உயர்கல்வித்துறை தனியார் மயமாக வித்திடும். 

 

 

லோக்பால் சட்டத்தை இயற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மாநிலத்தில் எந்த திட்டத்தை எதிர்த்தாலும் கைது என்ற நிலை உள்ளது. அரசை பற்றி விமர்சித்தாலே கைது என்பது ஜனநாயக விரோத போக்கு. கோவை மாநகராட்சி குடிநீர் விநியோக உரிமை ஒப்பந்தம் தொடர்பாக அரசோ, மாநகராட்சியோ அறிவிக்காமல் தனியார் நிறுவனம் தான் அறிவித்துள்ளதாகவும், அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் 5 ஆண்டுகள் மட்டுமே ஒப்பந்தம் என உள்ளது - தனியார் நிறுவன செய்தி குறிப்பில் 26 ஆண்டுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது முரண்பாடாக உள்ளது. 

ஒப்பந்தத்தின் முழு தகவலை மாநகராட்சி வெளிப்படை தன்மையாக வெளியிட வேண்டும். சூயஸ் நிறுவனம் தொடர்பாக தவறான தகவலை அமைச்சரும் அரசும் வழங்குவது தவறு. வெளிப்படைதன்மை இல்லாமல் போடப்படும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். குடிநீர் வழங்குவதற்கு சர்வதேச அளவிலான தொழில்நுட்பங்கள் தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய அவசியமில்லை. 

 

 


ஏற்கனவே 2 நெடுஞ்சாலைகள் உள்ள நிலையில் 3வதாக 8 வழிச் சாலை அமைக்க தேவையில்லை என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. இதனை எதிர்த்து தொடர்ந்து கட்சி பல போராட்டங்களை கையில் எடுக்க உள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தால் அதனை மாநில அரசு உரிய சட்ட நிபுணர்களை கொண்டு மாநில உரிமைகளை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்