தமிழகத்தில் சித்திரை பிறந்ததிலிருந்து கோவில் திருவிழாக்கள் தொடங்கிவிடுவது வழக்கம். கடந்த சில வருடங்களாக கரோனா காரணங்களால் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு அனைத்து கோவில் திருவிழாக்களும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், குளமங்கலம் வடக்கு மணிவர்ண மழை மாரியம்மன் கோவில், மேற்பனைக்காடு மழை மாரியம்மன் கோவில்களில் ஒரே நேரத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வானவேடிக்கைகளுடன் அம்மன் வீதி உலாவும் இரவு கலை நிகழ்ச்சிகளும், அன்னதான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
இன்று தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு காய், கனி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் கொத்தமங்கலம் கோவில் தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். ஒவ்வொரு கிராமத்திலும் நடந்த தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
கொத்தமங்கலத்தில் மட்டும் ஒரே நேரத்தில் 3 தேர்களின் தேரோட்டம் நடந்தது. அதாவது வாழவந்த பிள்ளையார் தேரை சிறுவர்கள் மட்டுமே இழுத்துச் சென்றனர். அடுத்ததாக பேச்சியம்மன் தேரை பெண்களும் 3-வதாக முத்துமாரியம்மன் தேரை அனைத்து பக்தர்களும் இழுத்துச் சென்றனர். ஒரே நேரத்தில் 3 தேர்களின் தேரோட்டம் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.