Skip to main content

சீருடையில் சாராயம் கடத்திய பெண் போலீஸ்; சுற்றி வளைத்த தனிப்படை

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

Female policeman who smuggled liquor in uniform nagapattinam

 

மது கடத்தலை தடுக்க வேண்டிய காவலரே சீருடையில் சாராயம் கடத்தி கைதாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

 

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மது கடத்தல் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் அவ்வப்போது நடவடிக்கை எடுப்பதும் வழக்கமாகிவிட்டது. ஆனால், நிரந்தரமாக கடத்தலுக்கு முடிவுகட்ட காவல்துறையால் முடியவில்லை. காவல்துறையில் இருக்கும் சிலருக்கும் கடத்தல்காரர்களுக்கும் மதுக்கடைக்காரர்களுக்கும் இடையே இருக்கும் நெருக்கம் தான் இதற்கு காரணம் என நேர்மையான காக்கிகள் கூறி வேதனை அடைவார்கள். அந்த வகையில், மது கடத்தலை தடுக்க வேண்டிய காவலரே மது கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் தான் நாகையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்துள்ள வாஞ்சூர் பகுதியில் இருந்து மதுபானம் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து, சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக சென்ற வெள்ளை நிற சொகுசு காரை தனிப்படை போலீசார் பின்தொடர்ந்தது சென்றனர். அந்த கார் அக்கரைப்பேட்டை கடற்கரை பகுதியில் உள்ள நினைவு ஸ்தூபி பகுதிக்கு சென்றது. அங்கு காரில் இருந்து இறங்கிய காவலர் உடை அணிந்த பெண் மற்றும் அவரது கணவன் உள்ளிட்ட மூன்று பேர் காரில் இருந்த சாராயம் மற்றும் மதுபான பாட்டில்களை, அங்கிருந்த பெண் உள்பட பல்வேறு நபர்களிடம் விற்பனைக்கு கொடுத்ததை மறைந்திருந்த தனிப்படை போலீசார் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காரை சுற்றி வளைத்த போலீசார் காவலர் உடையில் இருந்த பெண் உள்ளிட்ட 6 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

 

விசாரணையில், அந்தப் பெண் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல்நிலைய காவலர் ரூபினி என்பதும், காரை ஓட்டி வந்தவர் அவரது கணவர் ஜெகதீஸ் என்பதும், உடன் இருந்தவர்கள் காடம்பாடியைச் சேர்ந்த கோபிநாத், தெற்கு பொய்கை நல்லூரைச் சேர்ந்த ராஜசேகர், மகாலிங்கம், மகேஸ்வரி என்பதும் தெரியவந்தது. 

 

பின்னர், பெண் காவலர் ரூபினி, அவரது கணவர் ஜெகதீஸ் உட்பட ஆறு பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்ததோடு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் மற்றும் 110 லிட்டர் சாராயம், 7 பெட்டிகளில் இருந்த 336 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்