புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10 ஆயிரம் லிட்டர் அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வந்தது. இத்தகைய சூழலில் இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. அதே சமயம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள கஞ்சனூர் அருகே உள்ள கே.ஆர். பாளையம் திறந்தவெளி கிணற்றில் மனித கழிவு கலக்கப்பட்டதாக கிராம மக்கள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இந்த கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரைத்தான் கே.ஆர். பாளையம் கிராமத்தில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மோட்டார் மூலம் விநியோகிப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகார் குறித்து விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கிணற்றின் தடுப்பு சுவரின் மீது ஏறி அமர்ந்து மர்ம நபர்கள் கிணற்றில் மனித கழிவை கலந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.