கடந்த ஒரு ஆண்டாக வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை கிடுகிடுவென உயர்ந்து தற்போது 1100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் பொருளாதார ரீதியாக தத்தளித்து வருகின்றனர்.
சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள காட்டுமன்னார்கோவிலில் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமையில் ஏராளமான பெண்கள் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்பப் பெற கோரியும் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அதற்கு முன்பாக அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுதார்கள்.
மேலும் அதே இடத்தில் விறகு அடுப்பில் சமையல் செய்தும் போராட்டம் நடத்தினார்கள். சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் பெண்கள் நடத்திய இந்த வித்தியாசமான போராட்டத்தில் மாநில காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் மணிரத்தினம், பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி மற்றும் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இந்த வித்தியாசமான போராட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.