Skip to main content

“திமுக அரசியல் இயக்கம் மட்டுமல்ல, அறிவு இயக்கம்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 15/07/2023 | Edited on 15/07/2023

 

DMK is not only a political movement but also a knowledge movement CM Stalin

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு  வருகின்றன. அந்த வகையில், தமிழக அரசு சார்பில் மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 2.61 ஏக்கர் நிலத்தில், 2,22,815 சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ கட்டப்பட்டுள்ளது.

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணியளவில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார். இதையடுத்து நூலகத்தில் இருந்த வருகைப் பதிவேட்டில், “கலைஞர் நூற்றாண்டு நினைவு நூல் நிலையத்தை மதுரையில் திறந்து வைக்க வாய்ப்பு கிடைத்தமைக்கு பெருமைப்படுகிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் அயராது உழைப்போம், வாழ்க கலைஞர்” என தனது கருத்துகளை பதிவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். நூலகத் திறப்பு விழாவில் ஹெச்.சி.எல் குழுமத் தலைவர் ஷிவ் நாடார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

அதனைத் தொடர்ந்து நூலகத்தில் உள்ள அரங்குகளை முதல்வர் பார்வையிட்டார். அப்போது அங்கு இருந்த குழந்தைகளிடம் முதல்வர் சிறிது நேரம் உரையாடினார். முன்னதாக நூலகத்தின் வாயிலில் உள்ள கலைஞர் சிலையை முதல்வர் திறந்து வைத்து கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்புக்குப் பின்னர் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை என்றால், மதுரை தமிழ்நாட்டின் கலைநகர். கலைஞர், தமிழ்நாட்டின் தலைநகரில் அண்ணாவின் நூற்றாண்டில் நூலகத்தை அமைத்து தந்தார். இன்று கலைஞரின் நூற்றாண்டில் இந்த கலைநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை தென் தமிழ்நாட்டின் அறிவாலயத்தை அமைத்துள்ளேன். இந்த நூலகத்தை திறந்து வைக்கும் பெரும் வாய்ப்பும் பெருமையும் எனக்கு கிடைத்துள்ளதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

 

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த் இந்த மாமதுரையில் சங்க கால இலக்கியங்களை சாமானியர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் நூலகம் வைக்காமல் வேறு எங்கு வைக்க முடியும். சிலப்பதிகாரம் குறித்தும், காற்சிலம்போடு நீதி கேட்ட கண்ணகி குறித்தும் கலைஞர் தீட்டாத எழுத்தும் ஓவியங்களும் இல்லை. அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என அறச்சீற்றம் கொண்டு கண்ணகி எரித்திட்ட இந்த நகரத்தில் லட்சக்கணக்கான நூல்கள் கொண்ட நூல் நிலையத்தால் அறிவுத் தீ பரவப் போகிறது.

 

திராவிட இயக்கம் என்றாலே அறிவு இயக்கம் தான். தமிழ்ச் சமுதாயத்தின் எழுச்சிக்கும் மீட்சிக்கும் தேவையான கருத்துகளை எழுதி, பேசி, படித்து வந்தவர்கள் திராவிட இயக்கத்தினர். திமுகவின் தலைமைக் கழகத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அதற்கு அறிவகம் என பெயர் வைத்தார். சென்னை அண்ணா சாலையில் புதிதாக தலைமைக் கழகத்தை அமைத்த கலைஞர் அண்ணா அறிவாலயம் என பெயர் வைத்தார். திமுக அரசியல் இயக்கம் மட்டுமல்ல, அறிவு இயக்கம். படிப்பகங்களால் வளர்ந்து ஆட்சி பொறுப்புக்கு வந்து இன்று பிரம்மாண்டமான நூலகங்களைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறோம்” எனப் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்