Skip to main content

’நந்தனத்தில் கூடிடுவோம்!’-திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு

Published on 31/05/2019 | Edited on 31/05/2019

 

திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:    ‘’கழக வரலாற்றில் மீண்டும் ஒரு சாதனைமிகு வெற்றியைப் பெற்ற அந்த நன்னாளாம் மே 23ஆம் நாள் மாலையில் அண்ணா அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணா-தலைவர் கலைஞர் அவர்களின் சிலையின் கீழ் நின்று, மகத்தான வெற்றிக்கு நன்றி தெரிவித்தபோது, “இந்த வெற்றியைக் காண, தலைவர் கலைஞர் அவர்கள் இல்லையே” என்ற எனது இதயத்தின் ஏக்கத்தை வெளிப்படுத்தினேன்.

 

le

 

அப்போது என் நா தழுதழுத்தது. உடல் நடுக்குற்றது. எதிரில் நின்றிருந்த கழக உடன்பிறப்புகள் தந்த ஊக்கமும் உற்சாக முழக்கமும் என்னை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்ததுடன், தலைவர் கலைஞர் அவர்கள் நம்மிடையே இல்லாதபடி இயற்கை சதி செய்துவிட்டாலும், அவர் வகுத்துத் தந்த கொள்கைப் பாதையில் பயணித்துதானே, இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறோம் என்கிற ஆறுதலுடன், கழகம் பெற்றுள்ள மகத்தான வெற்றியைத் தலைவர்  கலைஞருக்கு காணிக்கையாக்குகிறேன் எனத் தெரிவித்தேன்.

 

அந்த உணர்வுடன்தான், உங்களில் ஒருவனாக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். 1924, ஜூன் 3. பைந்தமிழக வரலாற்றின் பக்கங்களில் பதிவாகிவிட்ட நாள். எத்தனை யுகமானாலும் இதனை எவராலும் அழிக்க முடியாது என்கிற வகையில் திருக்குவளை எனும் கிராமத்தில் பிறந்து, திருவாரூரில் வளர்ந்து, திராவிட இயக்கம் எனும் மானமும் அறிவும் வளர்க்கும் கொள்கையை ஏற்று, அதனைத் தமிழ்க்கொடியாக உயர்த்தி நின்று, தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறையும், தமிழ்நாட்டு அரசியலை சுழற்றும் அச்சாணியாக 50 ஆண்டுகளுக்கு மேலாகவும், இந்திய அரசியலில் ஜனநாயகத்திற்கும் சமூகநீதிக்கும் மதச்சார்பின்மைக்கும் ஆபத்து உருவானபோதெல்லாம் அதனைக் கட்டிக்காப்பதில் மூத்த தலைவராகவும் விளங்கிய நம் ஆருயிர்த் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள், ஜூன் 3.

 

ஒவ்வொரு ஆண்டும், அவரை நேரில் கண்டு வாழ்த்துகள்  பெறும், முதல் ஆளாக இருப்பேன். தந்தையைக் காணும் தனயனாக அல்ல, தலைவரைக் காணும் தொண்டனாக, அவரது கோடானுகோடி உடன்பிறப்புகளில் ஒருவனாக நேரில் வாழ்த்துகளைப் பெறும்போது யானையின் பலம் உடலிலும் உள்ளத்திலும் பரவியது போன்ற உணர்வு ஏற்படும். எனக்கு மட்டுமா? கழகத்தின் முன்னணி நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகள், உடன்பிறப்பே என்ற தலைவரின் ஒற்றைச் சொல்லில் கட்டுண்டு கழகம் காக்கும் தொண்டர்கள் என அத்தனை பேரும் அவர் முகம் கண்டு வாழ்த்தவும், வாழ்த்து பெறவும் வாய்ப்பினைப் பெற்றோம். ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞர்  அவர்களின் கொள்கை முழக்க உரை கேட்டு நாம் மட்டுமல்ல, நாடே ஊக்கம் பெறும்.  ஜூன் 3 தலைவரின் பிறந்தநாள் என்பது, கழகத்தின் திருநாள். தமிழர்களின்  பெருநாள். 

 

தலைவர் கலைஞர் அவர்கள் இல்லாமல், அவரது  பிறந்தநாளை முதல் முறையாகக் கொண்டாடுகிறோம். இல்லை.. இல்லை.. நம் ஊனோடும் உயிரோடும் கலந்திருக்கின்ற தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். இயற்கையின் சதியால் அவர் நம்மிடையே இல்லாமல் இருக்கலாம். நம் உள்ளத்தில், உணர்வினில், ஒவ்வவொரு செயல்பாட்டில், இயக்கத்தில், கொள்கையில் என எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார். தலைவர் கலைஞரின் நினைவின்றி நீங்களுமில்லை, நானுமில்லை. அவர் தந்த பயிற்சியால், அதனடிப்படையில் நாம் மேற்கொண்ட முயற்சியால், ஜனநாயகம் காக்கும் தேர்தல் களத்தில் தி.மு.கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. 

 

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.கழகம் உருவெடுத்திருக்கிறது. மதவாத சக்திகளின் கொடுங்கரங்களில் சிக்காமல் தமிழ்நாட்டைக் காப்பாற்றியிருக்கும் தி.மு.கழகத்தின் தேர்தல் வியூகம், மொத்த இந்தியாவையும் தெற்கு திசை நோக்கித் திரும்பிப் பார்த்திடச் செய்திருக்கிறது. தி.மு.க. வகுத்த மதச்சார்பற்ற வியூகம் என்கிற தமிழ்நாட்டின் தேர்தல் சூத்திரம், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் அவசியம் என்கிற நிலை  உருவாகியுள்ளது. இத்தகைய மகத்தான வெற்றிக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு உங்களில் ஒருவனான  எனக்கு வாய்த்திருந்தாலும், இந்த வெற்றிக்கு மூலகாரணமாகவும் மூல பலமாகவும் இருப்பவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். 

 

எப்போதெல்லாம் நாட்டின் ஜனநாயகத்திற்கும் பன்முகத்தன்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இந்தியாவின் வடதிசை,தெற்கு திசை நோக்கிப் பார்வை செலுத்துவதும், அந்தப் பார்வையின் பொருள் உணர்ந்து, நாட்டைக் காக்கும் வெற்றி வியூகம் வகுப்பதும் தலைவர் கலைஞர் அவர்களின் அரசியல் அறமாக இருந்திருப்பதை இந்தியாவில் உள்ள எந்த இயக்கமும் மறுக்க முடியாது. தலைவர் கலைஞர் அவர்கள் வகுத்தளித்த அரசியல் அறத்தைக் கடைப்பிடித்து இம்முறை நாம் பெற்றிருக்கின்ற  வெற்றி, வடக்கை வியக்க வைக்கிறது. தெற்கை இணைக்க வைக்கிறது. ஒட்டுமொத்த நாட்டையும் பிரமிக்கச் செய்கிறது.

 

மகத்தான இந்த வெற்றியை தலைவர் கலைஞர் அவர்களுக்கு காணிக்கையாக்கும் வகையில் ஜூன் 3 அன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் கழகப் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர்  தலைமையில் நடைபெறும் மாபெரும் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அந்நிகழ்ச்சிக்காக சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ., அவர்களும் - அவருக்கு பக்கபலமாக கழக நிர்வாகிகளும் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். உங்களில் ஒருவனான நானும் கழக முன்னணியினரும் சிறப்புரை ஆற்றுகின்ற இப்பொதுக்கூட்டத்தில் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சித் தலைவர்களும், ஆதரவு வழங்கி வரும் அரசியல்-பொதுநல அமைப்பினரும் பங்கேற்று தலைவர் கலைஞரின் புகழையும், கழகம் பெற்றுள்ள வெற்றியின் சிறப்பையும் எடுத்துரைக்க இருக்கின்றார்கள். 

 

கழகம் நம் குடும்பம். நம் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம். தலைவர் கலைஞர் நம் குடும்பத் தலைவர். அவரது பிறந்தநாள் விழா என்பது நம் வீட்டு விழா. வீட்டு விழா மட்டுமல்ல, தமிழ்நாட்டு விழா. தலைவர் கலைஞர் அவர்கள் சிறப்புரையாற்றிய பிறந்தநாள்விழா பொதுக்கூட்டங்களுக்கு எப்படி நாம் ஆர்ப்பரித்துத் திரள்வோமோ அப்படியே அவருக்கு இந்த வெற்றியைக் காணிக்கை செலுத்திடும் பெருவிழாவிலும் அனைத்து மாவட்ட கழகச் செயலாளர்களும் தங்கள்   மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து நிர்வாகிகள், செயல்வீரர்கள், தொண்டர் பட்டாளத்துடன் ஆர்ப்பரித்து அணி திரண்டிட வேண்டும். பேரறிஞர் அண்ணாவின் அருகே ஓய்வு கொள்ளும் தலைவர் கலைஞரைத் தாலாட்டும் வங்கக் கடல் அலைகளைவிட அவரது உடன்பிறப்புகளாம் உங்களின் வருகை எனும் அலைகள் அதிகமாக இருந்திட வேண்டும். 

 

வெற்றிக்கு வியூகம் தந்த மகத்தான தலைவருக்கும், வெற்றியை நமக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவிக்கின்ற விழாவாகப் பிறந்தநாள் பொதுக்கூட்டம் சிறப்பாக அமைந்திடச் செய்வது உங்களின் ஆர்வத்திலும்  உழைப்பிலும் இருக்கிறது. அதற்கும் மேலாக, தலைவர் கலைஞர் அவர்களின் மேல் உங்களுக்கிருக்கும் பற்றின் வெளிப்பாடாக அது அமைந்திடும். 

 

மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் வெற்றியினை ஈட்டிய கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தங்கள் நன்றியினை வெளிப்படுத்துவதுடன், தங்களை வெற்றி பெறச் செய்த தொகுதி முழுவதும் நன்றி அறிவிப்பு நிகழ்வுகளையும் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாக்களையும் மாதம் முழுவதும் நடத்திட வேண்டும்.

 

கழகத்தின் மாவட்டச் செயலாளர்களும் மற்ற நிர்வாகிகளும் ஜூன் மாதம் முழுவதும் தலைவர் கலைஞரின் மாதமாகக் கருதி, அவரது பிறந்தநாள்  விழா பொதுக்கூட்டங்கள், நல உதவிகள் வழங்கும் விழாக்கள், அறிவுசார்ந்த நிகழ்வுகள் என மக்களின் மனம் நிறைந்த தலைவர் கலைஞர் அவர்களைக் கொண்டாடிட வேண்டும்.

 

அதன் தொடக்கமாக, ஜூன் 3 அன்று நந்தனத்தில் கூடிடுவோம். வெள்ளமெனத் திரண்டு, வெற்றியின் நாயகர் கலைஞருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றியினைத் தெரிவிப்போம். நம் இலட்சியப் பயணத்தில் பெற்றுள்ள-பெறப்போகின்ற மகத்தான வெற்றிகளைத் தலைவர் கலைஞருக்கு காணிக்கையாக்கிடுவோம்!’’

சார்ந்த செய்திகள்