Skip to main content

போலீஸ் எஸ்ஐ பணியிடைநீக்கம்; அபராதம் வசூலில் மோசடி புகார்!!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

சேலத்தில், போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையில் ரசீதில் பதிவு செய்யாமல் மோசடி செய்ததாக காவல்துறை உதவி ஆய்வாளர் வியாழக்கிழமை (டிச. 12) பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.


சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து விதிகளை மீறினால் அவர்களுக்கு, அந்த இடத்திலேயே அபராதம் (ஸ்பாட் பைன்) விதிக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இலகுரக, கனரக வாகன ஓட்டிகளைவிட ஹெல்மெட் அணியாமல், ஓட்டுநர் உரிமமின்றி செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளே பெரும்பாலும் போக்குவரத்துக் காவலர்களிடம் அபராதம் செலுத்தும் நிலைக்கு ஆளாகின்றனர்.

Dismissal of police SI; Fraud Complaint for Fines SALEM DISTRICT POLICE


அபராதம் வசூலிக்கும் தொகைக்கு உரிய ரசீதை அந்த இடத்திலேயே காவலர்கள், பிஓஎஸ் உபகரணத்தில் பதிவிறக்கம் செய்து கொடுத்து விடுகின்றனர். நிலைமை இவ்வாறு இருக்க, சேலம் மாநகர காவல்துறையில் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் (எஸ்ஐ), அபராதம் வசூல் தொகையில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது.


அண்மையில், தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஒருவரை எஸ்ஐ கோவிந்தராஜ் மடக்கிப் பிடித்தார். அவருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். அதனால் வாகன ஓட்டிக்கும் அவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. என்றாலும் அபராதத் தொகையை செலுத்திவிட்ட அந்த வாகன ஓட்டி, அதற்கான ரசீது தொகையை கொடுக்கும்படி கேட்டுள்ளார். 


பிஓஎஸ் உபகரணத்தில் தகவல்களை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து ரசீது தாளை அந்த வாகன ஓட்டியிடம் வழங்கினார். ஆனால், அந்த ரசீதில் அபராதத் தொகை பெற்றுக்கொண்டதற்கான விவரங்கள் பதிவு செய்யப்படாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கேட்டதால் அவர்கள் இருவருக்கும் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்தக் காட்சிகளை அந்த வாகன ஓட்டியுடன் வந்த ஒருவர், கைபேசியில் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். இந்த காணொலிக் காட்சி, காவல்துறை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், அபராதக் கட்டண விவரங்கள், உரிய ரசீதில் பதிவு செய்யப்படவில்லை என்பது ஊர்ஜிதமானது. இதையடுத்து, எஸ்ஐ கோவிந்தராஜை பணியிடைநீக்கம் செய்து, மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் வியாழக்கிழமை (டிச.12) உத்தரவிட்டார். மேலும், குறிப்பிட்ட தொகைக்கு மேல் கூடுதலாக அபராதம் வசூலிக்கக்கூடாது என்றும், வசூலிக்கப்படும் தொகைக்கு உரிய ரசீது கொடுக்கப்பட வேண்டும் என்றும் போக்குவரத்துப் பிரிவு காவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.




 

சார்ந்த செய்திகள்