தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
97.89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை திருப்பூர் மாவட்டமும், மூன்றாம் இடத்தை பெரம்பலூர் மாவட்டமும் பிடித்துள்ளன.
தேர்வு எழுதிய 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி என 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 96.38 சதவீதமும், மாணவர்கள் 91.45 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் பாடப்பிரிவில் படித்து தேர்வு எழுதிய நந்தினி என்ற மாணவி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். கூலித்தொழிலாளி மகளான நந்தினி 600க்கு 600 எடுத்திருப்பது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் மாணவிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.