Skip to main content

தெறித்து ஓடும் நிர்வாகிகள்- தவிக்கும் தினகரன்

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

 


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளராக உள்ள டி.டி.வி.தினகரன், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். அதில் 15 நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

 

ட்


வேட்புமனுதாக்கல் செய்ய இன்னும் 6 நாட்களே உள்ளன. அதிலும் வரும் 23 மற்றும் 24ந்தேதி விடுமுறை நாளாக உள்ளது. மீதியுள்ளது நான்கு நாட்களே. ஆனாலும் இன்னும் மீதியுள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கவில்லை. அதில் திருவண்ணாமலை, ஆரணி, அரக்கோணம், திருவண்ணாமலை போன்ற தொகுதிகளும் அடக்கம்.


ஏன் இன்னும் வேட்பாளர் அறிவிக்கவில்லையென அமமுக நிர்வாகிகள் சிலரிடம் நாம் கேட்டபோது, ஆளும்கட்சியாக உள்ள அதிமுகவை எதிர்த்து அதிலிருந்து பிரிந்து தினகரன் பின்னால் வந்தோம். இங்கு வந்து லட்சங்களில் செலவு செய்துவிட்டோம். அப்படியிருக்க தேர்தலில் நில்லுங்கள், செலவு செய்யுங்கள் எனச்சொல்கிறார் தினகரன். ஆளும்கட்சியான அதிமுக, எதிர்கட்சியான திமுக என இருபெரும் கட்சிகளுக்கு மத்தியில் சுண்டெலி நாங்கள். இது அவருக்கும் தெரியும். ஆனால் நில்லுங்கள் எனச்சொல்கிறார்.


திருவண்ணாமலை தொகுதியில் நில்லுங்கள் என முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவரும், மா.செவுமான பஞ்சாட்சாரத்தை கேட்டார்.  என்னால் முடியாது என பின் வாங்கிவிட்டார். தொகுதியில் பெரும்பலமாக வன்னியர் வாக்கு உள்ளதால் நீங்கள் நில்லுங்கள் என தெற்கு மா.செ தர்மலிங்கத்திடம் சொன்னார்.  என்னிடம் பணமில்லை என அவரும் தயங்கிவிட்டார்.


வேலூர் தொகுதியில் நில்லுங்கள் என முன்னால் எம்.எல்.ஏக்களான ஞானசேகரன், கலையரசன், முன்னால் மா.செ க்களான சிவசங்கரன், வாசு போன்றவர்களிடம் பேச, பணமில்ல, நீங்க தர்றதாயிருந்தா நிற்கிறேன், இல்லைன்னா இல்லை என ஒவ்வொருவரும் சொல்லிவிட்டனர். தற்போது, முன்னால் அமைச்சர் பாண்டுரங்கனிடம் பேசி அவரை நிற்க வைப்பதாக பேசிவைத்துள்ளார்.


அரக்கோணம் தொகுதியில், முன்னால் எம்.பி கோபாலை நிற்கச்சொன்னார் தினகரன்.  அவர் முடியாது என்றதால் அவரது மகனும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ பார்த்திபனிடம், நீங்க நில்லுங்க, நீங்க சொல்ற ஆளுக்கு எம்.எல்.ஏ சீட் தந்துடலாம் எனச்சொல்ல அவரும் தயக்கத்தில் உள்ளார். இதனால் தான் காலியாகவுள்ள 18 தொகுதிகளுக்கு பெரும்பாலானவற்றுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களையே வேட்பாளராக நிறுத்திய தினகரன், சோளிங்கர் தொகுதியில் பார்த்திபனை அறிவிக்காமல் உள்ளார்.  இதேப்போல் ஆரணி தொகுதியில் சிலரை கேட்க அவர்கள் எங்களால் முடியாது என ஓடிவிட்டார்கள்.


தேர்தல் செலவுக்குன்னு பணம் எதுவும் தரமாட்டாறாம், வேட்பாளராக நிற்பவர்கள் தான் பார்த்துக்கனுமாம், ஜெயிக்கறமாதிரியிருந்தா செலவு செய்யலாம், பூத்ல உட்காரவைக்கவே ஆள் இல்லாம இருக்கோம், இதுல எங்க செலவு செய்து நிக்கறதுன்னு, சீட்டே வேணாம்னு கட்சி நிர்வாகிகள் தலை தெறிக்க ஓடறாங்க, அதனால் தான் மீதி தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவிக்கறது தாமதமாகிறது என்றார்கள்.

சார்ந்த செய்திகள்