Skip to main content

வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் மனமுடைந்த மகள் தற்கொலை!

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

Depressed daughter passed away due to lack of toilet facilities at home

 

சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட ஞானப்பிரகாசம் குளக்கரையைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சித்ரா. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்துவருகிறார்கள். இவர்களது மகள் அனுசுயா (17). இவர் சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்துவருகிறார். இவரது வீட்டில் கழிவறை வசதி இல்லை இதனால் அவரது குடும்பத்தினர் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழித்துவருகிறார்கள். கடந்த சில நாட்களாக வீட்டில் கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தருமாறு அனுசுயா தனது பெற்றோரிடம் கூறிவந்துள்ளார்.

 

ஆனால் கோவிந்தராஜ் - சித்ரா தம்பதியினருக்கு தினமும் கிடைக்கும் கூலியே போதுமானதாக இல்லை. குடும்ப வறுமையின் காரணமாக அவர்களால் கழிவறை வசதி செய்துகொடுக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த அனுசுயா, கடந்த 19ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. வலி தாங்க முடியாமல் அனுசுயா அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். இருப்பினும் அனுசுயாவின் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

 

அங்கு சிகிச்சை பெற்ற அவர், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (24.09.2021) அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது அம்மா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர். வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தப் பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்