திமுக பொருளாளர் துரைமுருகன், இறந்தவர் மற்றும் குடிமாற்றம் செய்தவர்களின் பெயர்கள் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகன் பேசுகையில்,
ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், தோழமை கட்சிகளும் வருடா வருடம் ஒரு வார்டில் இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள் பட்டியலை சேகரித்து அதிகாரிகளுக்கு அனுப்புகிறார்கள். இறந்தவர்கள் மற்றும் குடிபெயர்ந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து அதிகாரிகள் நீக்கியிருக்க வேண்டும். ஆனால் திரும்ப திரும்ப எழுதிக்கொடுத்தும் இதுவரையில் நீக்காமல் இருப்பது எனக்கு இரண்டு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று அதிகாரிகள் சோம்பேறியாக இருப்பார்கள் அல்லது இறந்தவர்களின் பெயர்களை வைத்து வாக்குபெற பின்புலத்தில் இருந்து யாரோ செயல்பட்டு கொண்டிருக்கிருக்கலாம் என கூறினார். மேலும் இந்த நிலை தொடர்ந்தால் திமுக சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
இடைத்தேர்தல் தள்ளிவைப்பு குறித்த கேள்விக்கு,
நம்ம ஊரில்தான் வராத மழைக்கு ரெட் அலர்ட் கொடுப்பார்கள். வராத மழைக்கு தேர்தலை தள்ளிவைப்பார்கள். அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் மற்றும் அம்பேத்கார் சட்ட கல்லூரி இயக்குனரையும் நியமிக்கும் பொழுது ஆளுநர் எங்கோ இருந்தவர்களை கொண்டுவந்து இங்கே நியமித்தார். அப்போதே சொல்லியிருக்கலாம் ஆனால் இப்போது சொல்லியிருக்கிறார் துணைவேந்தர் நியமனத்தில் பல கோடிகள் புரண்டது என. என் அரசியல் அனுபவத்தை பொறுத்தவரை ஒரு மாநிலத்தின் ஆளுநர் இப்படி கூறியிருப்பது எங்கோ உதைக்கிறது, விடியும் முன்னே சேவல் கூடுவதை போல இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் வரை இந்த ஆட்சி தாங்காது என்றார்.