Skip to main content

மணல் மேட்டிலிருந்து வெளியேறும் வெள்ளத்தால் வீடுகள், விவசாய நிலங்கள் சேதம்!

Published on 11/11/2021 | Edited on 11/11/2021

 

Damage to houses and agricultural lands due to floods coming out of the sand dunes

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியிலுள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் திறந்தவெளி சுரங்கங்களின் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய தென்னிந்திய மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. நிலக்கரி சுரங்கங்களில் வெட்டப்படும் மண்ணானது, நெய்வேலி பகுதியைச் சுற்றி மலைபோல் குவித்துவைக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையால் மலைபோல் குவித்துவைக்கப்பட்டுள்ள மணல் மேட்டிலிருந்து வெளியேறக் கூடிய மழைநீர், காட்டாற்று வெள்ளம் போல் கிராமப் பகுதிகளில் உள்ள வீடுகளையும், விவசாய விளைநிலங்களையும் மூழ்கடித்துவருகிறது. மேலும், மணல்மேட்டின் ஒரு பகுதியான கம்மாபுரம், கீணனூர், கோபாலபுரம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் என்.எல்.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டிருந்த வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கின.

 

Damage to houses and agricultural lands due to floods coming out of the sand dunes

 

இதனால் பயிர்கள் அழுகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், மணல் மேட்டிலிருந்து வரக்கூடிய மழை நீருடன், சவுட்டுத் தன்மைகொண்ட மணலும் விவசாய நிலங்களில் படிவதால் மண்ணின் வளம் முற்றிலுமாக மாறுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதேபோல், மணல்மேட்டின் மறுபகுதியான ஊமங்கலம், வெளிக்கூணங்குறிச்சி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வாய்க்கால்கள் சரியாக அமைக்கப்படாததால், காட்டாற்று வெள்ளம் போல் மழை நீரானது கிராமப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துவருவதால் பொதுமக்கள் செய்வதறியாமல் திகைத்துவருகின்றனர்.

 

மேலும், வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் அனைத்தும் நனைந்து சேதமடைந்துள்ளது. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் வசிப்பதற்குப் போதிய இடம் இல்லாமல் தவித்துவருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி. நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும், மணல் மேட்டில் அமைக்கப்பட்டுள்ள வாய்க்காலைத் தூர்வாரி, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை உடனடியாக பாதுகாக்கவில்லை என்றால், தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துவிடும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்