Skip to main content

''அப்பப்பா என்னா வெயிலு... தாங்க முடியலப்பா'- காணாமல் போன கை ஏற்றம், கவலை ஏற்றம்!

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 

pudukottai

 

தமிழ்நாட்டில் ஆறுகளில் உள்ள மணலையும் காடுகளில் உள்ள மரங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளை கொண்டுபோன பிறகு கிட்டத்தட்ட 30, 40 வருஷத்துக்கு முன்னால் இருந்த கையேற்று, கவலை ஏற்றம் எல்லாமே காணாமல் போய் ஆயிரம் அடி ஆழத்திற்கு தண்ணீர் போய்விட்டது. ஆழ்குழாய் கிணறு அமைத்து கரண்ட் மோட்டாரை இறக்கி பட்டனை தட்டினால்தான் தண்ணீர் வந்து ஊற்றுகிறது. நிலத்தடி நீர் கீழே போகப்போக கையேற்று, கவலை ஏற்றங்களுக்கு தேவையான உருளைகட்டை, கயிறு, வாளி, காளை மாடுகளும் காணாமல் போய்விட்டது. இவையெல்லாம் அரிய பொருட்களின் படங்களாக தான் இப்போது காணமுடிகிறது. அந்தப் படங்களைப் பார்த்தாலும் அதற்கான நீண்ட விளக்கமும் சொல்ல வேண்டியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் வறட்சி மாவட்டமாக இருந்தாலும் ஆலங்குடிக்கு கிழக்கே ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் நடக்கிறது. அதிலும் சில வருடங்களாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆலங்குடி - வடகாடு சாலையில் உள்ள கோயில்பட்டி கிராமத்தில் சில வருடங்களுக்கு முன்பே 300, 400 அடி ஆழ்குழாய் கிணறுகளில் கூட தண்ணீர் நின்றுவிட்டது. ஆனால் அதே ஊரில் உள்ள ஒரு பழைய செம்புரான் கல் கட்டிய கிணற்றில் ஒரு நாளும் தண்ணீர் வற்றியதில்லையாம். 20 அடி ஆழத்தில் பால் போல தண்ணீர் கிடக்கிறது.

 

சித்திரை கத்திரி வெயிலின் தாக்கத்தோடு வேகமாக வந்த 87 வயது நல்லதம்பி தாத்தா... ''அப்பப்பா என்னா வெயிலு, தாங்க முடியலப்பா'' என்று சொல்லிக் கொண்டே கிணற்றுப் பக்கம் போய் தோளில் போட்டு வந்த சின்னத் துண்டை கோவணமாக கட்டிக்கொண்டு கரையில் இருந்த வாளியை கிணற்றுக்குள் இறக்கி வேகவேகமா தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டு அங்கே கிடந்த கல்லில் கையோடு கொண்டு வந்த சட்டையை துவைத்தார்.

 

pudukottai

 

என்னங்கய்யா வேகமாக வந்தீங்க இப்படி நின்னு குளிக்கிறீங்களே என்றோம்..

 

எனக்கு 87 வயசாகுது தம்பி, கிட்டத்தட்ட 70 வருசமா இந்த கிணத்துல தான் தண்ணி இறைச்சு குளிக்கிறேன். மோட்டார்லயும், குளத்துலயும் குளிப்பேன் ஆனா இந்த கிணத்துல குளிக்கிற சுகம் வேற எதுலயும் கிடைக்கிறதில்லை. ஊரெல்லாம் போர் கேணியில தண்ணி இல்லன்னு சொன்னப்ப கூட இந்த கேணியில தண்ணி வற்றலயே. பால் மாதிரி தண்ணி வரும். டவுன்ல தனி ரூமுக்குள்ள குளிக்கிறதைவிட இப்படி குளிக்கிறது எனக்கு புடிக்கும்'' என்றார் நல்லதம்பி தாத்தா.

 

 

 

சார்ந்த செய்திகள்