Skip to main content

கொடைக்கானல் அருகே தனியார் சொகுசு விடுதியில் கலாச்சார நிகழ்ச்சி நடத்த தடை! ஏமாற்றத்துடன் சென்ற சுற்றுலாப்பயணிகள்!

Published on 14/02/2020 | Edited on 14/02/2020

கொடைக்கானல் அருகே தனியார் சொகுசு விடுதியில் கலை நிகழ்ச்சி நடத்த மதுரை ஐகோர்ட் திடீர் தடை விதித்தது. இதனால் டெண்டு போட்டும் கூட கலை நிகழ்ச்சி  நடத்தமுடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.கொடைக்கானல் மேல்மலை பகுதியிலுள்ள  பூம்பாறை கிராமத்தில் கிளப் இந்தியா ரிசார்ட் மற்றும் மெட்ரோ வாட்டர் என்ற சொகுசு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலின் இயக்குனர் போதி சாத்வி காந்த்ராஜ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பூம்பாறையில் உள்ள சொகுசு விடுதி கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு முறையாக உரிமை பெறப்பட்டுள்ளது. கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்த கலாச்சார மையம் நடத்தி வருகிறோம் கலாச்சார மையம் சார்பில் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை இசை கலை மற்றும் உணவு திருவிழா நடத்தப்படும்.

 

Cultural event  banned in Kodaikanal private luxury hotel

 



இதில் தேர்வு செய்யப்பட்ட 1000 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை இசை கலை மற்றும் உணவு திருவிழா நடத்த அனுமதி கேட்டு கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் மனு கொடுத்தோம். அவர் அனுமதி மறுத்துவிட்டார். எனவே அதை ரத்து செய்து எங்கள் ஓட்டலில் கலாச்சார நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தோம். இந்த வழக்கு விசாரணையின் போது, குடியிருப்பு மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒலி மாசு ஏற்படாமல் நிகழ்ச்சி நடத்தப்படும் என ஹோட்டல் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து ஹோட்டலில் நிகழ்ச்சி நடத்திக்கொள்ள அனுமதி வழங்கி தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இணையதளம் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது பெயர்களை பதிவு செய்தனர். இதற்காக ரிசாத் வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் டெண்டு அமைக்கப்பட்டது. கலை, இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடு துரிதமாக நடந்தது. மேலும் உணவு தயாரிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்கிடையே நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில் மனுதாரரின் சொகுசு விடுதி ஒன்றை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 

 

Cultural event  banned in Kodaikanal private luxury hotel


 

 

இங்கு 30 அறைகள் மட்டுமே உள்ள நிலையில் ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே அசம்பாதங்களை தடுக்கும் வகையில் கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள சொகுசு விடுதியில் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைச்சாமி, ரவீந்திரன் ஆகியோர் கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் கலை நிகழ்ச்சி நடத்த தடை விதித்து உத்தரவிட்டனர். இதற்கிடையே ஐகோர்ட் தடை விதித்திருப்பது அறியாத ஆண் பெண்கள் பலர் பூம்பாறையில் உள்ள சொகுசு விடுதி வளாகத்திற்கு நேற்று மாலை குவிந்தனர். இதில் பெரும்பாலானோர் வெளிமாநில வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆவர்.

தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் வந்திருந்தனர். இவர்கள் விலையுயர்ந்த கார்களில் அங்கு வந்து முகாமிட்டு இருந்தனர். ஒரு சிலர் அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களில் அருகே அமர்ந்திருந்தனர். இந்த விஷயம்  கொடைக்கானல் டிஎஸ்பி ஆத்மநாதன் இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், முருகன் ஆகியோருக்கு தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.

 



பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் நிகழ்ச்சி நடத்துவதற்கு ஐகோர்ட் தடை விதித்து இருப்பதால் திரும்பி செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதனை அடுத்து அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உள்ள குண்டுபட்டியில் ஒரு தனியார் நடத்திய கலை நிகழ்ச்சியில் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதன் மூலம் 270 க்கும் மேற்பட்ட ஆண் பெண்கள் சிக்கினார்கள். இது கொடைக்கானல் மட்டுமின்றி தமிழகத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் நேற்று தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. இதன் எதிரொலியாக போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவின் பேரில் கொடைக்கானல் பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். குறிப்பாக பழனி கொடைக்கானல், வத்தலக்குண்டு கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். அனைத்து வாகனங்களிலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன போலீசாருடன் இணைந்து வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் கொடைக் கானலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. 

சார்ந்த செய்திகள்