Skip to main content

கடலூர்: காணொளி காட்சி மூலம் குறைகேட்பு! சித்த மருத்துவத்தில் கரோனா சிகிச்சை! - ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி.

Published on 04/08/2020 | Edited on 04/08/2020
cuddalore

 

வாரந்தோறும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படுவது வழக்கம். 

 

இந்தக் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று தொடர்புடைய அதிகாரிகளிடம் குறைகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவார்கள். அதனால் மாவட்ட ஆட்சியர் குறைதீர்வு கூட்டத்தில் தங்களது குறைகளைத் தெரிவிக்க மாவட்டம் முழுவதிலிருந்தும் பொதுமக்கள் நேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவது வாடிக்கை.

 

ஆனால் கரோனோ தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக நடைமுறையிலுள்ள ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக குறைதீர்வு கூட்டங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடத்தப்படவில்லை. மனு கொடுக்க வரும் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மனுக்களைப் போட்டுவிட்டுச் சென்று விடுவார்கள். அம்மனுக்களைப் பிரித்துப் படித்துப் பார்க்கும் மாவட்ட ஆட்சியர்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிவைத்து குறைகளைத் தீர்வு காண அறிவுறுத்தி வந்தனர்.

 

இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொளி காட்சி மூலம் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தினை நடத்த மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி நடவடிக்கை மேற்கொண்டார்.

 

அதன்படி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்ட காணொளி கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

 

அதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் அருகே வரவேற்பாளர் அமரும் இடத்தில் கேமராவுடன் கூடிய எல்.இ.டி டிவி அமைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பாக மனு கொடுக்க வந்த பொதுமக்கள் ஒவ்வொருவராக அமர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்களைத் தெரிவித்தனர். அதைக் காணொளி காட்சி மூலம் பார்த்த ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

 

அதையடுத்து செய்தியாளரிடம் பேசிய சந்திரசேகர் சகாமூரி, "கரோனா ஊரடங்கால் கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமைகளில் நடைபெற்று வந்த குறைதீர்வு கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று  காணொளி காட்சி மூலம் பொது மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் முதலில் வந்த 30 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்தனர். இந்தக் குறைகேட்பு கூட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் அதிக நபர்கள் பங்கெடுக்கும் வகையில் அடுத்தடுத்த கூட்டங்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

 

அதேபோல்  பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

 

இதனிடையே கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் கரோனோ பாதித்து சேர்க்கப்பட்ட 192 பேருக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

சித்த மருத்துவமனையைப் பார்வையிட்டு,  சித்த மருத்துவ முறையில் கொடுக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து  மருத்துவர்களிடம் விசாரித்த மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி, "கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

அவ்வாறு சிகிச்சை பெறுபவர்களை அலோபதி மருத்துவர்கள்,  சித்த மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.  சிகிச்சை பெறுபவர்களுக்கு சித்த மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.  நோய்த் தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கும் அலோபதி மருத்துவத்துடன் சித்த மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன" என்றார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்