Skip to main content

கைக்குழந்தையோடு பேரணியில் பங்கேற்ற தம்பதியினர்... நேரில் அழைத்துப் பாராட்டிய கனிமொழி எம்.பி.!

Published on 06/10/2020 | Edited on 06/10/2020

 

DMK MP Kanimozhi leads rally in Chennai to condemn Uttar Pradesh government!

 

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர், செப்டம்பர் மாதம் 14 -ஆம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். நாக்கு வெட்டப்பட்டு, முதுகெலும்பு முறிந்த நிலையில், அந்த கும்பலிடம் இருந்து தப்பித்த அந்தப் பெண், சிகிச்சைக்காக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது என பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

 

kiki

 

நேற்று (06-10-2020) மாலை, சென்னை சின்னமலை ராஜிவ் காந்தி சிலையிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி தி.மு.க மகளிர் அணி சார்பாக கனிமொழி எம்.பி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை தி.மு.க தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவருமான ஸ்டாலின் துவக்கி வைத்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டுமென உத்தரப்பிரதேச அரசை வலியுறுத்தியும், ராகுல் காந்தியிடம் உத்தரப்பிரதேச அரசு பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் இந்தப் பேரணி நடைபெற்றது.


இப்பேரணியின் பாதியிலே, பேரணிக்கு வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி, “தி.மு.க தலைவர் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை மீது நம்பிக்கை இல்லை, நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதனை வலியுறுத்தி ஆளுநரைச் சந்தித்து மனுகொடுக்கச் சென்ற எங்களை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். ஒரு மனு கொடுக்கக் கூட அனுமதிக்கவில்லை” எனக் கண்டனம் தெரிவித்தார். 

 

kani

 

நேற்று நடந்த இந்தப் பேரணியில், ஒரு தம்பதியினர் தங்கள் பெண் குழந்தையைக் கையில் ஏந்தியவாறு பங்கேற்றது பலருக்கும் வியப்பளித்தது. "பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்காக, இந்தப் பேரணியில் தங்கள் கைக்குழந்தையோடு கலந்துகொண்டதாக" அந்தத் தம்பதியினர் கூறினர். இந்தப் பேரணியில், பெண் குழந்தையோடு பங்கேற்ற தம்பதியினரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெகுவாகப் பகிரப்பட்டது. இதுபற்றி விசாரித்ததில், அது செல்வேந்திரன் தம்பதியினர் என்றும் அந்தப் பெண் குழந்தையின் பெயர் குயிலி நாச்சியார் என்றும் தெரியவந்தது.

 

இந்நிலையில், தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி இன்று அந்தத் தம்பதியினரை நேரில் அழைத்துப் பாராட்டினார். அப்போது, பெண் குழந்தை, குயிலி நாச்சியாரை கையில் ஏந்தி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதனால், செல்வேந்திரன் தம்பதியினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்