Skip to main content

வடமாநில தம்பதி கொடூர கொலை; உத்தரபிரதேச வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது!

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

couple incident uttarapradesh youngters police goondas act

 

சேலம் அருகே, வடமாநில தம்பதி உள்ளிட்ட மூன்று பேரை கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில் சிக்கிய இருவரை, காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

 

சேலத்தை அடுத்த திருமலைகிரி அருகே உள்ள பெருமாம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ். வெள்ளிப்பட்டறை அதிபர். இவரிடம் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் (வயது 29), அவருடைய மனைவி வந்தனா குமாரி (வயது 25) ஆகியோர் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். வெள்ளி பட்டறைக்கு அருகிலேயே இவர்களுக்கு தங்கராஜ், வீடு ஒன்றை ஒதுக்கி இருந்தார். 

 

இவர்களுடன், ஆகாஷின் சித்தப்பா மகன் சன்னி குமார் (வயது 15) என்ற சிறுவனும் தங்கியிருந்தார். ஆகாஷ் தம்பதிக்கு கைக்குழந்தை இருந்ததால், குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக உத்தரபிரதேசத்தில் இருந்து சன்னிகுமாரை உதவிக்கு வரவழைத்து இருந்தனர். தங்கராஜின் வெள்ளிப்பட்டறையில் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் (34), ரிகான் குரேஷி (வயது 25) ஆகியோரும் வேலை செய்து வந்தனர். 

 

இந்த நிலையில், கடந்த 2020- ஆம் ஆண்டு அவர்கள் இருவரும், தங்களது மாநிலத்தைச் சேர்ந்த கூட்டாளிகள் அஜய்குஷ்வா, சூரஜ் ஆகியோருடன் சேர்ந்து தங்கராஜை தீர்த்துக்கட்டி விட்டு, வெள்ளிப்பொருள்களை கொள்ளையடித்துச் செல்ல திட்டம் தீட்டினர். 

 

இதை ஆகாஷூம், வந்தனா குமாரியும் அவர்களுடன் தங்கியிருந்த சன்னி குமாரும் தெரிந்து கொண்டனர். தங்களது கொலை, கொள்ளைத் திட்டத்தை அவர்கள் தங்கராஜிடம் சொல்லி விடுவார்களோ என பயந்த தினேஷூம்,  அவருடைய கூட்டாளிகளும் ஆகாஷ், அவருடைய மனைவி, உறவினர் மகன் ஆகிய மூவரையும் கடந்த 08/03/2020ம் தேதியன்று, கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்தனர். 

 

இதுகுறித்து இரும்பாலை காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வினோத், அஜய்குஷ்வா, சூரஜ் ஆகியோர் கடந்த 2020- ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தினேஷ், ரிகான் குரேஷி ஆகிய இருவரையும் இரும்பாலை காவல்துறையினர் கடந்த மே மாதம் உத்தரபிரதேசத்தில் வைத்து கைது செய்தனர். தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 

 

இவர்கள், மக்கள் வசிக்கும் பகுதியில் திட்டமிட்டு கொலை செய்து, பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளனர். பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்துள்ளனர்.

 

இதையடுத்து அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். அதன்பேரில் காவல்துறையினர் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 


 

சார்ந்த செய்திகள்