Skip to main content

மாணவ -மாணவிகள்  போராட்டத்தினால் நள்ளிரவில் சாதிச்சான்றிதழ் வழங்கிய கோட்டாட்சியர்!

Published on 16/03/2018 | Edited on 16/03/2018
school

   

    தோடர், கோத்தர், குறும்பர், பனியர், இருளர், காட்டுநாயக்கர் என தமிழகத்தில் 36 வகையான பழங்குடிச் சமூகத்தவர்கள் உள்ளனர். குடிமக்கள் மதிப்பீட்டின்படி தமிழகத்தில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காட்டுநாயக்கர் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டியினை சுற்றி கழுகுமலை, வானரமுட்டி, நாலாட்டின்புதூர், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், எப்போதும்வென்றான் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரம் நபர்களும் ஒட்டு மொத்த மாவட்டத்தினைப் பொறுத்தவரை 4 ஆயிரம் நபர்களும் வாழ்கிறார்கள் என்பது மதிப்பீடு.!

 

      தங்களது சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் இனச்சான்று வழங்க கோரி அச்சமுதாய மக்கள் பலமுறை விண்ணப்பித்தும், சான்றிதழ் வழங்கப்படவில்லை.  மாவட்ட ஆட்சியர் அறிவுருத்திய பின்னரும், கிராமநிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் விசாரணை முடிந்த பிறகும், சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தினால், சான்றிதழ் கிடைக்கமால் காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள் சான்றிதழ் இல்லாமல் எவ்வித சலுகையும் பெறமுடியமால், வேலைவாய்ப்புக்கும், மேல் கல்விக்கும் செல்ல முடியாத நிலை உள்ளதால் உடனடியாக சாதிசான்றிதழ் வழங்க கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான டில்லிபாபு, சி.பி.எம். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள், பள்ளி மாணவ -மாணவிகள் சான்றிதழ் கிடைக்கும் வரை  கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்கள்.

 

   போராட்டத்தினைக் கைவிடக் கோரி கோட்டாட்சியர் அனிதா மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்பும் உடன்பாடு ஏற்படவில்லை.  சான்றிதழ் கிடைக்கும் வரை போராட்டத்தினை கைவிட போவதில்லை என்றுத் தீர்மானமாக் கூறி தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதையடுத்து மீண்டும் கோட்டாட்சியர் அனிதா, டி.எஸ்.பி.ஜெபராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். முதற்கட்டமாக 7 பேருக்கு நள்ளிரவில் சாதிச்சான்றிதழ் வழங்கினர். மேலும் விண்ணப்பம் செய்தவர்கள் மனுக்கள் மீது ஆய்வு செய்து தகுதியுள்ளவர்களுக்கு விரைந்து வழங்கப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.

சார்ந்த செய்திகள்