Skip to main content

எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் ஊழல்; ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பகிரங்க குற்றச்சாட்டு

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

Corruption on University vice chancellors  during the reign of Edappadi Palaniswami! Governor Panwarilal Purohit

 

தமிழ்நாட்டில் 21 அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றின் நிர்வாகப் பணிகளை துணைவேந்தர்கள் கவனிப்பார்கள். துணைவேந்தர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். இவர்கள் தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறையின் தேடல் குழு பரிந்துரை மூலம் பரிந்துரை செய்யப்பட்டு, பல்கலைக்கழக வேந்தரான தமிழ்நாடு ஆளுநர் துணைவேந்தர்களை நியமிப்பார். இதில் தமிழ்நாடு உயர் கல்வித்துறையின் தேடல் குழு மூன்று நபர்களை பரிந்துரை செய்யும், அதில் ஒருவரை ஆளுநர் துணைவேந்தராக நியமிப்பார். இந்த தேடல் குழுவில், ஆளுநரின் பிரதிநிதி, தமிழ்நாடு அரசின் பிரதிநிதி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் பிரதிநிதி என மொத்தம் மூன்று நபர்கள் இருப்பார்கள். ஆளுநரின் பிரதிநிதி, தேடல் குழுவின் தலைவராக செயல்படுவார். 

 

Corruption on University vice chancellors  during the reign of Edappadi Palaniswami! Governor Panwarilal Purohit

 

இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது என தமிழ்நாட்டின் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குற்றஞ்சாட்டியிருந்தார். இதனை அவர், அப்போது நடந்த உயர் கல்வி மேம்பாட்டு கருத்தரங்கில் பேசினார். இது அப்போது தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

 

இதற்கு விளக்கம் அளித்த அன்றைய உயர் கல்வித்துறை அமைச்சரான கே.பி. அன்பழகன், துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கோ உயர்கல்வித் துறைக்கோ ஒரு சம்பந்தமும் இல்லை. தேடல் குழு பரிந்துரை செய்யும் 3 நபர்களில் துணைவேந்தரை தேர்வு செய்து நியமிப்பது ஆளுநர்தான் என்று தெரிவித்திருந்தார். 

 

Corruption on University vice chancellors  during the reign of Edappadi Palaniswami! Governor Panwarilal Purohit

 

இந்நிலையில் பன்வாரிலால் புரோகித், பணி காலம் முடிவடைந்து தமிழ்நாட்டில் இருந்து இடமாறுதல் பெற்று பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பஞ்சாப்பில் நடந்த அரசு விழா ஒன்றில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் 2017 முதல் 2021 வரை பணி செய்தது மிக மோசமான அனுபவம். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி ரூ. 40-50 கோடிக்கு விற்கப்பட்டது” என குற்றம்சாட்டியுள்ளார். 

 

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் இவ்வாறு நடந்தததாக மீண்டும் ஒரு முறை பன்வாரிலால் புரோகித் குற்றஞ்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர், தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்தபோது, மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட விவகாரம் கடும் எதிர்ப்பை கிளப்பியது. ஆளுநர் அரசு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற விமர்சனங்களையும், பல சர்ச்சைகளையும் தமிழ்நாட்டில் அவர் சந்தித்தார் என்பதும், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை தொட்டு அதற்கு எதிர்ப்புகள் எழுந்து பிறகு அதற்கு அவர், அவரது பணியை பாராட்டி அப்படி செய்ததாகவும் கூறி வருத்தம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்