Skip to main content

கரோனா மருத்துவக் கழிவு... தமிழ்நாட்டிற்கு எத்தனையாவது இடம்... மத்திய அரசு  தகவல்!

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

CORONA WASTE

 

கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மூன்றாம் அலை தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது. அதேபோல், தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருந்தபோதிலும் பொதுமக்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள தடுப்பூசி முகாம்களை நாடி வருகின்றனர். தொற்று எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் குறைந்துவருகிறது. 

 

இருந்தபோதிலும் ''மக்களுக்கு பெரிய அளவில் ஒரு அச்சம் இருந்தாக வேண்டும். ஏனென்றால் இந்தத் தொற்றிலிருந்து நாம் விடுபட்டுவிட்டோம் என்ற எண்ணம், மனநிலை யாருக்கும் வந்துவிடக் கூடாது. காரணம், இந்த தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. மூன்றாவது அலை என்ற ஒன்று இருந்தால், அது நிச்சயம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற எண்ணம் உலகத்தில் இருக்கிற எல்லா நாடுகளுக்குமே இருக்கிறது'' என அண்மையில் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

 

CORONA WASTE

 

தற்போது மற்றுமொரு மிகப்பெரிய சவாலாக இருக்கப் போவது கரோனா மருத்துவக் கழிவுகள்தான் என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில், இந்திய அளவில் கரோனா மருத்துவக் கழிவுகள் அதிகம் அகற்றப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளதாக மத்திய அரசு அறிவிவித்துள்ளது. 2020 ஜூன் மாதம் முதல் 2021 ஜூன் மாதம் வரை தமிழ்நாட்டில் மட்டும் 4,835.9 டன் கரோனா மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்தியப் பெருங்கடலில் ஸ்கூபா டைவிங் சென்ற குழுவினர், கடலுக்கடியில் முகக்கவசம் போன்ற மருத்துவக் கழிவுகளைக் கண்டு அதிர்ந்து, அதனை வீடியோ எடுத்து வெளியிட்டிருத்தனர். இது, எந்த அளவிற்கு முறையற்ற வழிகளில் மருத்துவக் கழிவுகள் அகற்றம் நடைபெறுகிறது என்பதற்கான உதாரணம் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல் ஆற்றங்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் செயல் என்பதும் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்