Skip to main content

தொடர் கனமழை; பேருந்துகள் இயக்குவது குறித்து வெளியான தகவல்

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Continuous heavy rain Information about running of buses

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாகத் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தென் மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் வெள்ளம் காரணமாகப் பேருந்துகள் இயக்குவது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் இன்று (18/12/2023) தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் பயணிகளின் வருகைக்கேற்ப மட்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் 60 பேருந்துகள் தென் மாவட்டங்களுக்கு இயக்க முடிவு செய்த நிலையில், மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக. பயணிகளின் வருகைக்கேற்றவாறு குறைவான பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாகத் தென் மாவட்டங்களிலிருந்து பிற ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிலைமையைக் கண்காணித்து, பயணிகளின் தேவைக்கு ஏற்ப மட்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்