Skip to main content

உணவகங்கள், மளிகைக் கடைகளில் புகார் எண் கட்டாயம்.... உயர் நீதிமன்றம் ஆணை! 

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

Complaint number mandatory in restaurants and grocery stores .... High Court order!

 

உணவகங்கள் மற்றும் மளிகைக் கடைகளில் கலப்படங்களைத் தடுக்க உணவு பாதுகாப்பு துறையின் புகார் எண்களைக் கடைக்காரர்கள் வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

மனோகர் என்ற நபர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், தனது கடையில் எடுக்கப்பட்ட மல்லித்தூள் தரமற்றிருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தரப்பில், ''வந்த புகார்களின் அடிப்படையில் நடந்த சோதனையில் கடையிலிருந்த மல்லித்தூள் தரமற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என்று  தெரிவிக்கப்பட்டது.

 

இதைப் பதிவுசெய்துகொண்ட நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன், ''ஒரு நிறுவனத்திற்கு எதிராக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் முடிவில் தலையிட முடியாது'' என தெரிவித்தார். மேலும், ''உணவகங்கள், மளிகைக் கடைகளில் விற்கும் உணவுப்பொருட்கள் பாதுகாப்பானது என்பதை உறுதிசெய்ய வேண்டும். உணவகங்கள் மற்றும் மளிகைக் கடைகளில் புகார் தெரிவிக்க வேண்டிய அலுவலர்களின் எண்களை இடம்பெறச் செய்வது கட்டாயம். ஆய்வு நடத்தினால் மட்டும் போதாது, கலப்படக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தரமற்ற உணவுப்பொருட்கள் குறித்துக் கொடுக்கப்படும் புகாருக்கு நடவடிக்கை எடுக்கத் தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உணவு பாதுகாப்பு ஆணையருக்கு உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்