Skip to main content

படிப்பிற்கு தடையாகும் சாதிச் சான்றிதழ்..! 

Published on 07/09/2021 | Edited on 07/09/2021

 

Community certificate is a barrier to study ..!

 

கல்லூரி கனவிற்கு சாதிச் சான்றிதழ் தடைபோட்ட நிலையில், பிறந்த சமூகத்தின் குலத் தொழிலுக்குத் திரும்பியுள்ளார் காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர்.

 

தென்காசி மாவட்டம், ஆழ்வார் குறிச்சியிலுள்ள திருநீலகண்ட விநாயகர் கோவில் தெருவில் காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்துவருகின்றனர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி விளிம்பு நிலையில் வாழ்ந்துவரும் இவர்களுக்கு சாதியைக் காரணம் காட்டி யாரும் வேலை கொடுக்காததால், தாங்களே ஊசி-பாசி மணி, சவரி முடி தயாரிப்பது, பாட்டில் பொறுக்குவது, பன்றி வளர்ப்பது ஆகிய தொழிலில் ஈடுபட்டு தங்களுக்கான ஜீவனத்தைப் பேணிவருகின்றனர்.

 

அதேவேளையில், கல்விதான் தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று குழந்தைகளைக் கல்வி பயில வலியுறுத்திவருகின்றனர். ஆனால், அதற்கு சாதிச் சான்றிதழ் தடையாக உள்ளதுதான் சோகம்.

 

“நான் ஏழாவதுவரை படித்திருக்கிறேன். என்னுடைய சாதிச் சான்றிதழில் காட்டு நாயக்கர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு எனது குழந்தைகளை சேர்த்து கல்வி பயில வைத்தேன். என்னுடைய மகள் விஜயலட்சுமி மேல்நிலைப் பள்ளி வகுப்பை முடிந்தவுடன் கல்லூரியில் சேர்க்க முயற்சித்தோம். கல்லூரியோ சாதிச் சான்றிதழ் இருந்தால்தான் சேர்த்துக்கொள்வோம் என்கிறது. மாவட்ட நிர்வாகமோ மௌனம் சாதிக்கிறது. சாதிச் சான்றிதழ் அளித்தால் மட்டுமே கல்வி, வேலைவாய்ப்புகளில் போட்டியிட முடியும். அப்போதுதான் எங்கள் சமூகம் முன்னேறும். இல்லையெனில் குலத்தொழில்தான் செய்ய வேண்டும். கல்லூரி ஆசை இருந்தாலும் மாவட்ட நிர்வாகத்தின் மெத்தன போக்கால் இப்போது எனது மகள் பாட்டில் பொறுக்கிக்கொண்டிருக்கிறாள்” என்கிறார் சங்கர்.

 

அருகிலுள்ள நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், தருவை ஆகிய பகுதியில் உள்ள காட்டு நாயக்கர் சமூகத்திற்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நெல்லை மாவட்டத்திலிருந்து பிரிந்த தென்காசி மாவட்ட நிர்வாகமோ, "இந்த மாவட்டத்தில் யாருக்கும் காட்டு நாயக்கர் சாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை" என தெரிவிக்கிறது.

 

படம்: விவேக்

 

 

சார்ந்த செய்திகள்