Skip to main content

கல்லூரி மாணவி லோகேஸ்வரி மரணம் - கல்வித்துறை, மாவட்டம் நிர்வாகம் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

Published on 13/07/2018 | Edited on 13/07/2018
logeshwari

 

தேசிய பேரிடம் மேலாண்மை பயிற்சியின்போது மரணமடைந்த கோவை தனியார் கல்லூரி மாணவி  லோகேஸ்வரி மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் காவல்துறையின் அனுமதி பெற்ற பிறகே இது போன்ற பேரிடர் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து அரசுத்  துறைகளுக்கும் தமிழக அரசு உரிய உத்தரவை உடனடியாகப்  பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

இது குறித்த  மு.க.ஸ்டாலின் அறிக்கை:   ‘’கோவை அருகில் தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் நடத்தப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு பயிற்சியின் போது, பி.பி.ஏ படிக்கும் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி லோகேஸ்வரி மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். மாணவியின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், மகளை இழந்து வாடும் பெற்றோருக்கும், உடன் பயிரும் மாணவியர்க்கும்  எனது ஆழ்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பேரிடர் பயிற்சியை மாணவ மாணவியர்க்குக் கற்றுக் கொடுக்கும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீது பயிற்சியாளரோ, அல்லது சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகமோ போதிய கவனம் செலுத்தவில்லை என்பது வேதனையளிக்கிறது. குறிப்பாக இரண்டாவது மாடியிலிருந்து குதிக்க வைக்கும் போது இவ்வளவு கவனக்குறைவாகவும், மெத்தனமாகவும் பயிற்சியாளர் நடந்து கொண்டது மிகவும் கண்டனத்திற்குரியது.

 

பேரிடர் பயிற்சி என்று வரும் போது முதலில் அதில் பங்கேற்போரின் பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை கல்வித்துறையோ அல்லது மாவட்ட நிர்வாகமோ கவனிக்கத் தவறியதும், அதற்கான வழிகாட்டுதலை வழங்கத் தவறியதும் இது போன்ற உயிரிழப்பிற்குக் காரணமாக அமைந்துள்ளது .

 

ஆகவே இது போன்ற பேரிடர் பயிற்சிகள் போதிய பாதுகாப்புகளுடன் நடைபெறவும், பேரிடர் பயிற்சி, நன்கு அனுபவம் பெற்றவர்கள் முன்னிலையில் நடக்குமாறும் பார்த்துக் கொள்வதோடு, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் காவல்துறையின் அனுமதி பெற்ற பிறகே இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து அரசுத்  துறைகளுக்கும் தமிழக அரசு உரிய உத்தரவை உடனடியாகப்  பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’’

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விழா (படங்கள்)

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

 

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் மாற்றுத் திறனாளி வீரர்கள் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கி, அரசாணை பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இவ்விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர். டாக்டர். சுந்தர், தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்க செயலாளர் கிருபாகர ராஜா, தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்க பொருளாளர் விஜய சாரதி, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர். சிம்மச்சந்திரன், கேல் ரத்னா விருது பெற்ற பாரா ஒலிம்பிக் பதக்க வீரரான திரு. மாரியப்பன், தியான்சந்த் விருது பெற்ற ரஞ்சித் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 

Next Story

காலை உணவுத் திட்டம்;  முதல்வரை பாராட்டிய உ.பி. எம்.பி

Published on 31/08/2023 | Edited on 31/08/2023


 

U.P. MP Appreciating the Chief Minister about breakfast plan

நாடாளுமன்ற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழுவினர் நேற்று 2வது நாளாக மதுரையில் ஆய்வு செய்தனர். அப்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கப்படும் காலை உணவை சாப்பிட்ட உத்தரப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் தமிழக முதல்வருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.

 

நாடாளுமன்ற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக திமுக எம். பி கனிமொழி பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தலைமையில் மக்களவை உறுப்பினர்கள் 21 எம்.பி.க்களும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 எம்.பி.க்களும் குழுவில் இடம் பெற்றுள்ளனர். அதன்படி, கனிமொழி தலைமையில், எம்.பி.க்கள் ஏ.கெ.பி.சின்ராஜ், ராஜ்வீர்டிலர், நரேந்திர குமார், தாளரிரெங்கையா, அப்துல்லா, கீதாபென்வாஜெசிங் பாய்ரத்வா, ஷியாம் சிங் யாதவ் உள்ளிட்ட 11 பேர் மதுரையில் உள்ள ஊர்களை ஆய்வு செய்தனர்.

 

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும், அரசுப் பள்ளி குழந்தைகளுக்கான ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ குறித்து மதுரையில் உள்ள சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவைப் பரிமாறினர். அப்போது, உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் தொகுதி எம்.பி.யும், பகுஜன் சமாஜ் கட்சியின் மக்களவை கட்சித் தலைவருமான ஷியாம் சிங், காலை உணவைச் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

 

அதற்கேற்ப, ஷியாம் சிங் உள்ளிட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் உணவு பரிமாறப்பட்டது. அதன் பின்னர், உணவைச் சாப்பிட்ட எம்.பி.க்கள் காலை உணவு திட்டம் சிறப்பான திட்டம் என்று கூறினர். எம்.பி ஷியாம் சிங், கல்வி பயிலும் மாணவர்களின் அக்கறை கொண்டு இந்த காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். அதன் பின்னர்,  நெல்பேட்டை  பகுதியில் உள்ள காலை உணவு சமையல் கூடத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.