சென்னை திருவொற்றியூரில் புதியதாக சூரை மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு ரூ. 200 கோடி மதிப்பீட்டில், மீன்வளம் மற்றும் நீர் வாழ் உயிரின உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டு மீன்பிடித் துறைமுகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி செவுள் வலை மற்றும் தூண்டில் மீன்பிடி விசைப் படகுகளுக்கென்று பிரத்யேகமாக கட்டப்பட்டு வரும் சூரை மீன்பிடித் துறைமுகத்தின் 95% பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று (14.10.2023) காலை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கள ஆய்வு செய்தார். அப்போது அங்கு நடைபெற்று வரும் பல்வேறு பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் பணிகள் விரைவாக முடிக்க வேண்டும் எனவும், பணிகள் தரமானதாக இருக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
மேலும் மீன் ஏலக்கூடம் மற்றும் வலை பின்னும் கூடம் ஆகிய கட்டடங்களின் அஸ்திவாரத்திற்குப் பயன்படுத்தப்படும் கம்பிகள் துருப் பிடிக்காமல் இருக்க எபாக்சி பூச்சு செய்து பயன்படுத்த வேண்டும் எனவும் கூடுதலாகத் தூர்வாரும் இயந்திரம் மற்றும் அஸ்திவாரத்திற்குத் துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்துமாறும், கூடுதல் பணியாட்களைப் பயன்படுத்தி இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் புதியதாகக் கட்டப்பட்டு வரும் திருவொற்றியூர் சூரை மீன்பிடித் துறைமுகத்தின் நுழைவாயில் மற்றும் வெளியேறும் வழிக்குத் தேவையான இடத்தை பெருநகர சென்னை மாநகராட்சியிடமிருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆய்வின் போது கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. இராதாகிருஷ்ணன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் கே.எஸ். பழனிசாமி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தலைமைப் பொறியாளர் ராஜு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் உடனிருந்தனர்.