கோவை சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏவும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளருமான நா.கார்த்திக் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தபோது, நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர், தனது உடலில் சிறிய மாற்றம் தெரிந்ததையடுத்து சென்ற 30 ந்தேதி கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு இருதயத்தில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது.உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி இருதய அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டது.
மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே, இதுகுறித்து தகவலறிந்த தமிழக முதல்வர் நா.கார்த்திக்கிடம் தொலைப்பேசியில் நலம் விசாரித்தார். தொடர்ந்து, உடல்நிலை தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், நா.கார்த்திக்கின் மனைவி கோவை மாநகராட்சி திமுக கழக மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி அவர்களிடமும் கேட்டறிந்தார். அறுவை சிகிச்சைக்கு முன்பும், அறுவை சிகிச்சைக்கு பின்பும் தொடர்ந்து 4 முறை தொலைப்பேசி மூலம் முதல்வர் நலம் விசாரித்தார்.
இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் பரப்புரை மேற்கொண்டு 26 ந் தேதி சென்னை திரும்பிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 26 ந் தேதி காலை 7-50 மணிக்கு மீண்டும் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் கார்த்திக்கிடம் நலம் விசாரித்தார். அப்போது அவர் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் தொடர்பாக கேட்டறிந்தவர், தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி, மேற்கொள்ளவும், உணவு முறைகள், அதன் கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் அவரிடம் அறிவுறுத்தினார். முதல்வரைப் போல் திமுக கொள்கை பரப்பு செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உட்பட கட்சியின் சீனியர் நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர் கார்த்திக்கிடம் உடல் நலம் சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள். இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட கார்த்திக் தற்போது நலம் பெற்று தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.