Skip to main content

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; போலீசார் விளக்கம்

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

chennai parrys corner temple incident police explain

 

சென்னை பாரிமுனை பகுதியில் வீரபத்ர சுவாமி கோவில் இன்று (10-11-23) காலை மதுபோதையில் இருந்த ஒருவர் அந்த கோவிலின் உள்ளே சென்றுள்ளார். அப்போது திடீரென்று அவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை கோவிலுக்குள் வீசியதாகக் கூறப்படுகிறது. இதனை பார்த்த மக்கள் கூச்சலிட்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதுபோதையில் இருந்த நபரை பிடித்து கைது செய்தனர்.

 

இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசிய நபர் முரளி கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. மேலும், இவர் அந்த கோவில் அருகே பழக்கடை ஒன்றை வைத்து நடத்தி வந்த நிலையில், இவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என்றும் அவர் பெட்ரோல் குண்டை கோவிலுக்கு வீசியதாகக் காவல்துறையினரிடம் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “சென்னை, பிராட்வே, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த முன் குற்ற வழக்குகளைக் கொண்ட ஜானகிராமன் மகன் முரளி கிருஷ்ணன்  (வயது 39) என்பவர், எல்லைக்குட்பட்ட பகுதியில் சி-5 கொத்தவால் சாவடி காவல்நிலைய ஆதியப்பாதெரு - கோவிந்தப்பா தெரு சந்திப்பில் உள்ள ஸ்ரீ வீரபத்திரசாமி கோவிலுக்கு நீண்டகாலமாக வந்து செல்பவர். இன்று (10.11.2023) காலை 08.45 மணியளவில், முரளி கிருஷ்ணன் அதிகமான குடிபோதையில் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கோவிலுக்குள் சென்று, கடவுள் சிலையை நோக்கி வீசியுள்ளார். உடனே, அவர் பிடிக்கப்பட்டு, விசாரணைக்காக சி-5 கொத்தவால் சாவடி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முரளி கிருஷ்ணன் அதிகமான போதை காரணமாக தெளிவற்ற  மனநிலையில் இருந்ததால், இச்செயலில் ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது. இச்சம்பவத்தில், எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பாக, இவர் மீது சி-5 கொத்தவால் சாவடி காவல் நிலையத்தில் வெடி மருந்துப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்