Skip to main content

திருமணமாகாத விரக்தி; தாயை தொடர்ந்து மகன் தீக்குளித்து தற்கொலை 

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

chennai new washermanpet mother son incident 

 

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவருடைய மனைவி நாகேஸ்வரி (வயது 57). இவர்களுக்கு நவீன் (வயது 34), விவேக் (வயது 32) என 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இரு மகன்களுக்கும் திருமணம் ஆகவில்லை என்பதால் நாகேஸ்வரி மன வருத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல் மகன்களின் திருமணம் தொடர்பாக நாகேஸ்வரி தனது கணவரிடம் பேசி உள்ளார். பின்னர் இது வாக்குவாதமாக மாறியுள்ளது. மேலும் மனைவியை கண்டித்த அசோகன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பின்னர் வீட்டின் அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் நாகேஸ்வரி, மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றித் தீ வைத்துக்கொண்டு தீக்குளித்தார். இதனால் நாகேஸ்வரி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தாய் இறந்த சோகம் தாங்காமல் மிகவும் விரக்தி அடைந்த நிலையில் இளைய மகன் விவேக் இருந்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் நேற்று காலை 5 மணிக்கு, வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்துச் சென்று காசிமேடு பகுதியில் உள்ள காலி இடத்தில் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீக்குளித்தார். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விவேக் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய் தீக்குளித்து இறந்த துக்கம் தாங்க முடியாமல் மகனும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்