Skip to main content

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது  கருணை காட்டக்கூடாது -சென்னை உயர்நீதிமன்றம்

Published on 24/09/2018 | Edited on 24/09/2018
 
high court tn

 

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது  கருணை காட்டக்கூடாது என்றும், அவர்களுக்கு பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுக்கா இருப்பாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன், தனது குடும்பச் சொத்து பாகப்பிரிவினை செய்தபோது கிடைத்த நிலத்திற்கு தனது பெயரில் பட்டா வழங்க கோரி மேட்டுப்பாளையம் தாசில்தாரிடம் விண்ணப்பித்துள்ளார்.


ஆனால் அந்த நிலம் அரசு புறம்போக்கு நிலம் எனக்கூறி பட்டா வழங்க தாசில்தார்  தரப்பில் மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து லட்சுமணன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சம்பந்தப்பட்ட  நிலத்தை ஆய்வு செய்து சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.


மேலும் அவரது உத்தரவில், சமீபகாலமாக  அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது குறித்து வேதனை தெரிவித்ததுடன், பட்டாக்கள் வழங்கும் முன் வருவாய் ஆவணங்களை முறையாக சரிபார்த்து வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதேபோல அரசு நிலம் ஆக்கிரமிப்பு நிலங்களை கண்டறிந்து அவற்றை அகற்ற அந்தந்த மாவட்ட ஆட்சியர் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், அரசு நிலத்திற்கு  பட்டா பதிவு செய்து கொடுத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.


அரசு நிலங்கள், நீர்நிலைகள் போன்றவற்றை ஆக்கிரமித்தவர்களுக்கு எந்த கருணையும் காட்டக் கூடாது எனவும் அரசு நிலங்கள் மக்கள் நலனுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்