பண்டிகை காலம் என்பதால் சென்னையில் வணிக வளாகங்கள், அங்காடிகள் அரசின் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதேபோல் மக்களும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, வணிக வளாகங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். பண்டிகை காலத்தில் பொருட்கள் வாங்குவதற்காகப் பொதுமக்கள் வெளியே செல்லும் பொழுது முகக்கவசம் அணிந்து கொள்வதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள், அங்காடிகள் மீதும், முகக் கவசம் அணியாத நபர்கள் மீதும் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொருவரும் கரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.