Skip to main content

“உயிர்க்கொல்லி நோய் வந்த போது எங்களிடம் தான் உதவி கேட்டனர்” - சென்னையில் சேகுவேரா மகள் பெருமிதம்

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

- நர்மதா தேவி, சி.பி.ஐ(எம்)

 

che guevara daughter Aleida Guevara spoke in Chennai

 

எர்னெஸ்டோ சே குவேரா. வெறும் முப்பத்தி ஒன்பதே ஆண்டுக் காலம் வாழ்ந்து மறைந்த கம்யூனிஸ்ட் புரட்சியாளர். அவர் வீர மரணமடைந்து 56 ஆண்டுகள் கரைந்துவிட்டன. ஆனால், இன்றளவிலும் உலக இளைஞர்களின் ஆதர்ச நாயகனாகத் திகழ்கிறார்.

 

தென் அமெரிக்க மக்கள் வட அமெரிக்காவின் ஏகாதிபத்திய முதலாளித்துவ சுரண்டலால் விலங்குகளை விட மோசமான நிலையில் வாழ்கிறார்கள் என்பதை தனது நெடிய பயணங்கள் வழி உணர்ந்தவர் சே. அர்ஜென்டினாவில் பிறந்து மருத்துவம் பயின்றுவிட்டு ஃபிடல் காஸ்ட்ரோவோடு இணைந்து கியூபப் புரட்சியை வெற்றிபெற வைத்தார். 

 

1959 ஆம் ஆண்டில் புதிதாய் மலர்ந்த சோஷலிச கியூபாவின் மத்திய வங்கித் தலைவர், தொழிற்சாலைகள் அமைச்சர் எனப் பல பொறுப்புகள் அவருக்கு இருந்தன. அவர் நினைத்திருந்தால் கியூபாவின் அமைச்சராக; கியூபாவின் முக்கியத் தலைவராக நிறைவோடு வாழ்ந்திருக்க முடியும். ஆனால், சே-வால் தன்னை ஒரு நாட்டின் குடிமகனாக மட்டும் சுருக்கிக்கொள்ள முடியவில்லை. உலகில் சுரண்டப்படும் அனைத்து நாட்டு பாட்டாளி வர்க்கமும் விடுதலை பெற வேண்டும் என்ற உணர்வு கொண்டவராக; ஓர் உண்மையான சர்வதேசவாதியாக அவர் இருந்தார். 

 

ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளில் முதலாளித்துவ சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அங்கெல்லாமும் புரட்சி செய்ய வேண்டும், அதற்கு தான் உதவ வேண்டும் என நினைத்தார். 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் தான் வகித்து வந்த எல்லா அரசுப் பொறுப்புகளையும் துறந்துவிட்டு, தனது குடும்பத்தையும் துறந்துவிட்டு, காங்கோ சென்றார். அங்கு அவர் மேற்கொண்ட புரட்சிகர நடவடிக்கைகள் தோல்வி காணவே, பொலிவியாவில் புரட்சிகர நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அங்கு சென்றார்.

 

கியூபா விஷயத்தில்தான் கோட்டைவிட்டோம்; இனியும் சும்மா இருப்போமா என மும்முரமாக இறங்கியது அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. அக்டோபர் 8, 1967 அன்று அவரை கைது செய்து, எந்தவிதமான விசாரணையும் இன்றி, அவரை மறுநாளே படுகொலை செய்தது. 1965ல் சே கியூபாவை விட்டுச் சென்றபோது அவரது நான்கு பிள்ளைகளில் மூத்த பெண் குழந்தை அலெய்டாவுக்கு நான்கரை வயது. இப்போது அலெய்டா ஒரு குழந்தைகள் நல மருத்துவராகப் பணியாற்றுகிறார். கியூபக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருக்கிறார். உலக மக்கள் எல்லோருக்கும் மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் எனப் போராடி வருகிறார்.

 

ஒரு மாத காலப் பயணமாக இந்தியாவிற்கு வந்திருப்பவர், ஜனவரி 17,18 ஆகிய தேதிகளில் சென்னைக்கு வருகை தந்திருந்தார். அவரோடு அவருடைய மகள் எஸ்டெஃபானி மச்சின் குவேராவும் வந்திருந்தார். அவர் ஹவானா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதன் தொழிற்சங்க அமைப்பான சி.ஐ.டி.யூ, அகில இந்திய கியூப ஒருமைப்பாட்டுக்குழு இவர்களுடைய பயணத்தை ஏற்பாடு செய்திருக்கின்றன.

 

17 ஜனவரி அன்று சென்னை விமான நிலையத்தில் இருவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் மிகப்பிரம்மாண்டமான ஒரு வரவேற்பை வழங்கினார்கள். அன்றைக்கு மாலை தி.நகர் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக்குழு அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், கட்சியின் வர்க்க வெகுஜன அரங்கப் பிரதிநிதிகள் பங்குபெற்ற சிறு உரையாடல் நிகழ்வில் டாக்டர் அலெய்டாவும், எஸ்டெஃபானியும் உரையாற்றினார்கள். ஏகாதிபத்திய அமெரிக்காவின் மனிதநேயமற்ற, சட்டத்துக்குப் புறம்பான பொருளாதாரத் தடைகளால் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கியூபா சந்தித்து வரும் நெருக்கடிகளைப் பற்றியும் சவால்களைப் பற்றியும் டாக்டர் அலெய்டா விவரித்தார்.  

 

மேலும் அவர் பேசும் போது, “அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் கியூபா தனித்திருக்கிறது. எந்த நாட்டுடனும் வர்த்தகம் செய்ய முடியாத சூழலில் நிறைய பொருட்களையும் சேவைகளையும் எங்களால் மக்களுக்கு உறுதி செய்ய முடியவில்லை. அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் வட அமெரிக்காவில் எல்லாம் கிடைக்கிறது. கியூபாவில்தான் எதுவும் கிடைக்கவில்லை என விஷப்பிரச்சாரம் செய்கின்றன. அதைப் பார்க்கும் இளைஞர்கள் எங்களுக்குப் பல விஷயங்கள் இல்லை என நினைக்கிறார்கள். எல்லா இளைஞர்களுக்கும் கல்வி, மருத்துவ சேவை உறுதி செய்யப்பட்டுள்ளது. என்றாலும், இன்றைய தலைமுறையினருக்கு வேறு சில தேவைகளும் இருக்கின்றன. அவர்களுக்கு ஏகாதிபத்திய அமெரிக்காவின் கொடூரச் செயல்களைப் பற்றிய புரிதலை நாங்கள் ஏற்படுத்தி வருகிறோம்.

 

ஆப்பிரிக்காவில் எபோலா உயிர்க்கொல்லி நோய் வந்தபோது, உலக சுகாதார அமைப்பு வட அமெரிக்காவிடம் மருத்துவர்களை அனுப்புங்கள் எனக் கேட்கவில்லை; இங்கிலாந்திடமோ, சுவிட்சர்லாந்திடமோ உதவி கேட்கவில்லை; நம்மிடம், கியூபாவிடம்தான் உதவி கேட்டது. ஏனெனில், உலகில் எங்கு மனிதர்களுக்குத் துன்பம் என்றாலும், நாம் மனிதநேயத்துடன் மனித சமூகத்துக்காக நிற்பவர்கள் என கியூபாவின் மதிப்பீடுகளைப் பற்றி கொள்கைகளைப் பற்றி புரியவைக்கிறோம். இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது பெரிய சவாலாக உள்ளது” என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்