Skip to main content

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா: சென்னை வந்துள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!

Published on 02/08/2021 | Edited on 02/08/2021

 

Centenary celebrations of the Tamil Nadu Legislative Assembly: President Ramnath Govind arrives in Chennai

 

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞரின் படத்திறப்பு விழா ஆகியவற்றில் கலந்துகொள்ள இன்று (02.08.2021) மதியம் 12 மணிக்கு சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அவரது வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் விழாக் கோலம் பூண்டுள்ளது. சென்னை வந்ததும் கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார் குடியரசுத் தலைவர். மாலை 5 மணிக்கு சட்டமன்றத்தில் விழா துவங்குகிறது. விழாவில் கலந்துகொள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே விழா அரங்கத்துக்குள் அனுமதிக்கப்படுவர். விழா துவங்குவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பாகவே அரங்கத்துக்குள் வந்துவிட வேண்டும். விழாவுக்கு வருபவர்கள் கரோனா கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அழைப்பிதழிலேயே அவர்கள் அமரும் எண் குறிப்பிடப்பட்டிருப்பதால் அந்த இருக்கையைத் தவிர்த்து வேறு இருக்கைக்கு செல்லக்கூடாது என்றும், N95 முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அழைப்பாளர்களுக்கு அறிவுறுத்துப்பட்டுள்ளது. அரங்கத்துக்குள் செல்ஃபோன்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள வரும் குடியரசுத் தலைவரையும் ஆளுநரையும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினும், சபாநாயகர் அப்பாவுவும் முன்னின்று வரவேற்று அரங்கத்துக்குள் அழைத்துச் செல்கின்றனர்.

 

Centenary celebrations of the Tamil Nadu Legislative Assembly: President Ramnath Govind arrives in Chennai

 

கவர்னர் பன்வாரிலால் தலைமையில் நடக்கும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த விழாவில், கவர்னர் பன்வாரிலால் தலைமை உரையையும், முதல்வர் ஸ்டாலின் சிறப்பு உரையையும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேருரையையும் வாசிக்கின்றனர். குடியரசுத் தலைவருக்கு சிறப்பு நினைவு பரிசும் வழங்கப்படவிருக்கிறது. விழா முடிந்து மாலை 5.55 மணிக்கு தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்டு ராஜ்பவன் திரும்பும் குடியரசுத் தலைவர், இன்றிரவு அங்கேயே தங்குகிறார். நாளை காலை உணவு முடித்துவிட்டு, சென்னையிலிருந்து ஊட்டி செல்கிறார் ராம்நாத் கோவிந்த். ஊட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 3 நாள் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்