Skip to main content

வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மீது கோவையில் வழக்குப் பதிவு! 

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

 Case registered on Vanathi Srinivasan MLA in Coimbatore !

 

தனிமனித இடைவெளி இல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்பட 14 பேர் மீது பந்தய நிலைய போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர். அனைத்து நாட்களிலும் கோவில்களைத் திறக்க வலியுறுத்தியும் திமுக அரசைக் கண்டித்தும் பாஜகவினர் நேற்றைய தினம் (07.10.2021) தீச்சட்டிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் தரிசனத்திற்குத் தடை விதித்துள்ளது. மேலும் விஷேச நாட்களிலும் கோவில்களில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

 

இந்நிலையில், அனைத்து நாட்களிலும் கோவில்களைத் திறக்க வலியுறுத்தி கோவை தண்டு கோவில் அருகில் 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் தீச்சட்டி ஏந்தியும் குளவை போட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ‘டாஸ்மாக் திறக்க அனுமதி, பள்ளிகள் அனுமதி, ஆனால் கோவில்களை திறக்க மட்டும் தடையா?’ என்பன போன்ற பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர். 

 

இதில் மேடை அமைத்து காளி நடனம் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தனிமனித இடைவெளி இல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உட்பட பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 14 நிர்வாகிகள் மீது பந்தய நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்